சீன எழுத்தாளரும், ஆன்மிகவாதியுமான ரெவ்.ஜான் மேக்காவன் திரட்டித் தொகுத்துள்ள நாட்டுப்புறக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இவற்றை வெறும் கதைகள் என்று குறுக்கி விட முடியாது. கட்டுக் கதைகளுக்குள் தான் ஆயிரமாயிரம் நிதர்சனங்களும், தத்துவங்களும், ரகசியங்களும் ஒளிந்திருக்கும். அவற்றை விட முக்கியமாய், பகுதி மக்களின் கலாசாரம், பண்பாடு, மேன்மைச் சிந்தனை, குண நலன்கள் போன்ற விழுமியங்களை அறிய முடியும்.
நுாலில் தொகுக்கப்பட்ட 15 கதைகளும், நம் நாட்டுப்புற கதைகள் மற்றும் புராணங்களோடு, மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. நிதானமும், அறமும், சகிப்பும் ஒருவனை ஒருபோதும் தாழ்த்தாது என்பதை ‘துறவி’ கதையும், அன்பிற்கு ஆவியும் திருந்தும் என்பதை ‘நதியின் கடவுள்’ கதையும், ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதையை, அப்படியே பிரதிபலிப்பதைப் போல், ‘மிருங்களின் குகை’ கதையும் உள்ளன.
பேரரசர்கள் என்றாலும், அவர்களும் நீதி தேவியின் சட்டத்தின் கீழ் தான் உள்ளனர். அறியாத் தவறுகளுக்கு மனம் வருந்தாதவர்களை, அவள் விட்டுவைப்பதில்லை என்பதை, ‘பழிவாங்கும் கடவுள்’ கதையிலும், ஒரு நன்நெறி போதனையாக வழங்கி உள்ளார்.
நிலப்பரப்பாலும், நிறம், இனம் போன்ற பேதங்களால் பிரிந்து கிடந்தாலும், மாந்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் தான் என்பதை, ஒவ்வொரு கதையும் உணர்த்தி நகர்கிறது.
– பெருந்துறையான்