யோகா சிகிச்சை, பிராண சிகிச்சை, முத்திரை சிகிச்சை ஆகியவற்றை தெளிவாக, எளிமையாக, இனிமையான படங்களுடன் விளக்கும் நுால். உடல், மனம், ஆன்மாவுடன் இணைதலே யோகம். மனிதனுக்குத் தேவை ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் இந்த மூன்றையுமே யோகத்தின் மூலம் பெறலாம்.
பதஞ்சலி முனிவர் ஆத்ம சக்தியை உணரும் அற்புத ரகசியங்களை யோக சூத்திரமாக, சாமதி, சாதனா, விபூதி, கைவல்ய பாதங்களாகப் பிரித்து, 196 சூத்திரங்களாகத் தந்துள்ளார். அஷ்டாங்க யோகத்தில், மன ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், உடல் ஒழுக்கம் ஆகிய பயிற்சிகளை விளக்கியுள்ளார்.
முத்திரை சிகிச்சையால் உச்சி முதல் பாதம் வரை உள்ள எல்லா உறுப்புகளையும், எல்லா வயதினரும் நோயின்றி இயங்க வைக்கலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வலி, கழுத்து வலிகளை போக்கிவிடலாம்.
தன்னம்பிக்கை, நேர்முக எண்ணங்களை வளர்க்கலாம். யோகாசனம், தியானம், நாடிசுத்தி, பிராணாயாமம் செய்யும் முறைகள் படத்துடன் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. நோயை குறிப்பிட்டு, நிவர்த்திக்கும் முத்திரைகள், யோகாசனங்கள், உண்ண வேண்டிய காய்கள், கீரைகள், கனிகளை குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
முனிவர்கள், ஞானிகள், யோகியர் கூறிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அஷ்டாங்க யோகங்களையும், அதன் பயன்களையும் படங்களுடன் விளக்கியுள்ளார்.
– முனைவர் மா.கி.ரமணன்