விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பொதுவுடைமை பூப்பதற்கும், ஆன்மிக நெறி தழைப்பதற்கும் பாடுபட்ட 18 தலைவர்களை புகழ்ந்து எழுதியுள்ள நுால். ‘தொண்டு செய்யும்பொது மக்கள் இயக்கமாக, துலாக்கோலே போல் நின்று விடுதலைக்கே, கண்ணாக வழிகாட்டி கடமையாற்றி, கடைப்பிடிக்க அமைதி வழிகாட்டினாயே’ எனக் காந்தியடிகளின் போராட்ட நெறிமுறையை வியந்து பாடியுள்ளார்.
வ.உ.சி.,யின் தியாகத்தை, ‘நுாலோர் செக்கடியில் நோவதும் காண்கிலையோ’ என பாடியுள்ளார். பின், ‘சோர்வுற்றோர் நிமிர்ந்து விடும் சொல்லான்’ என நேருவைப் புகழ்ந்து பாடுகிறார். ‘மடமை இந்திய பெண்டிருக்கெல்லாம், அடுக்களை விடுதலை கிடைத்தே களித்திட, துணிவுடன் களமெலாம் தோய்ந்தாய்’ எனக் கவிக்குயில் சரோஜினி நாயுடுவைப் பதிவு செய்துள்ளார்.
எதுகையும், மோனையும், இயைபுத் தொடைகளும் அமைந்து சொற்கட்டும், பொருள் சிறப்பும் பொதிந்து, தலைவர்களின் மாட்சிமை பொருந்திய வாழ்வை கவிதை மாலையாய் தொடுத்துள்ளார். மணித் தமிழுக்கு அணி சேர்க்கும் மற்றுமொரு மகுடம்.
– புலவர் சு.மதியழகன்