மொழியியல் மற்றும் கணினி மொழியியல் என்னும் பெரும் பிரிவுகளில், 60 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.
குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒரே நேரத்தில் குழப்பமின்றி கற்றுக் கொள்ள முடியும். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் போது, தாய்மொழியோடு ஒப்பிட்டுக் கற்றுக் கொள்வதில்லை; அந்தந்த மொழியாகவே கற்றுக் கொள்கின்றனர் குழந்தைகள்.
ஆனால், பெரியவர்கள் அயல் மொழியைக் கற்கும் போது, தாய்மொழி அல்லது தெரிந்த மற்றொரு மொழியோடு ஒப்பிடுவர். இது, மொழி கற்றலின் வேகத்தைக் குறைக்கும் போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது.
கணினித் தமிழ் வளர்ச்சியில் தமிழ் எழுத்துரு, விசைப்பலகை எனத் துவங்கி நடைமுறைக்குத் தேவையான சொல்லாளர், ஒளிவழி எழுத்துணரி, பேச்சு எழுத்துமாற்றி, எழுத்து- பேச்சுமாற்றி, இயந்திர மொழிபெயர்ப்பு என மென்பொருட்கள் உருவாக்கத் தேவையை பறைசாற்றுகிறது.
மொழியியல், மொழிபயிற்றல், கணினி மொழியியல், பிற துறைசார் மொழியியல், தமிழ்க்கணினியியல் போன்ற பிரிவுகளைச் சார்ந்தவர்களிடம் இருக்க வேண்டிய அறிவுப் பெட்டகம்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்