நிகண்டு, சிலம்பு, கணினி, கல்வியியல் மற்றும் பொதுத்தலைப்பில் அமைந்த, 23 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஐந்து கட்டுரைகள் நிகண்டுகளின் சிறப்புப் பற்றியும், வரலாற்று அடிப்படையில் சில அரிய கருத்துகளையும் கூறுகின்றன. முருகனின் ஆற்றலை எடுத்துக்கூறும் நிகண்டு பற்றிய கட்டுரை அரிய செய்திகளை உள்ளடக்கியது.
சிலம்பில் அமைந்துள்ள செய்யுள் வடிவங்களும், வரிப்பாடல்களும் குறிப்பிடும்படியான கட்டுரையாக உள்ளது. சிங்கப்பூர் வாழ் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எழுதிய, அந்த நான் இல்லை நான் என்ற கவிதை நுால் பற்றிய கட்டுரை ஆழமானது. களஆய்வு செய்து மனிதர்களின் வாழ்க்கைக் கோலங்களை எழுதிச் சென்ற ராஜம்கிருஷ்ணனின் நாவல்களில் பெண் ஆளுமைச் சிறப்பை ஆராய்ந்துள்ளது ஆய்வுத் திறனுக்குச் சான்றாக உள்ளது.
குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை பற்றிய கட்டுரை பயனுடைய எண்ணங்களை விதைக்கிறது. கணினி குறித்த ஐந்து கட்டுரைகள் ஆசிரியரின் கணினித் திறனைக் காட்டுவனவாய் உள்ளன. பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழார்வலர்க்கு பயன் விளைவிக்கும்.
– ராம.குருநாதன்