பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றி வரும், ‘மன்கிபாத்’ என்ற உரையின் தமிழாக்க கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி நுால்.
கடந்த 2014 விஜயதசமியன்று பிரதமரின் உரை துவங்கியது; மாதந்தோறும் ஒலிபரப்பாகிறது. நாட்டை வல்லரசாக்குதல், சர்வதேச அளவில் இந்திய அந்தஸ்தை உயர்த்துதல் போன்ற மையக் கருத்துகளை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். காலச்சூழலுக்கு ஏற்ப அறிவுரைகளையும் கூறுகிறார் பிரதமர்.
இந்த தொகுதியில், 2016 மே வரை ஆற்றிய 20 உரைகள் இடம் பெற்றுள்ளன. வள்ளுவரின் குறள் போல், பாரதியின் கவிதைகள் போல், பிற்காலத்தில் வரலாற்றில் இந்த உரைகள் சிறப்பிடம் பெறும் என பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது.
சுயநலமற்ற உழைப்பு, திட்டமிட்டு செயலாற்றும் திறன், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், உலக நாடுகளும் வியக்கும் தொலைநோக்கு பார்வை போன்றவை பிரதமரின் செயல்களாக முன்னிலைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள நுால்.
– ராம்