பரிமேலழகர் காலம்தொட்டு விளக்க உரை, எளிய உரை, புதிய உரை, புத்துரை, வார்ப்புரை என, பல வடிவங்களில் வந்துவிட்ட நிலையில், திருக்குறளுக்கு எளிய உரை எனும் தலைப்பில், வெளிவந்திருக்கும் நுால்.
திருக்குறள் முப்பாலுக்கும் முந்தைய நுால் அடிச்சுவட்டில், எளிய நடையில் வழக்கு சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது. குறள்களுக்கு பேச்சு வழக்கில் எளிய சொற்கள் கொண்டு உரை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளை விளக்கவும், எடுத்துச் சொல்லவும் குறள்களின் விளக்கங்கள் உதவும்.
பல குறள்களுக்கு மாறுபட்ட பொருள் தரப்பட்டுள்ளது. உதாரணமாக, கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், ‘மலர்மிசை ஏகினான்’ என்பதற்கு, ‘மலரைப் போன்ற மென்மையான’ என்றும், ‘தாள் சேர்தல்’ என்பதற்கு, ‘பாதங்களைச் சேர்தல்’ என்பதாகவும் பொருள் குறிக்கப்பட்டு உள்ளது.
நீத்தார் பெருமை அதிகாரத்தில், ‘மறைமொழி’ என்பதற்கு, ‘வேத வாக்கு’ என்றும், ‘அறம்’ என்ற சொல்லுக்கு, ‘கர்மம்’ என்றும் ‘தர்மம்’ என்றும், சான்றோன் என்பதற்கு, ‘சிறந்த அறிவாளி’ என்றும் பொருள் தரப்பட்டுள்ளது.
ஊழ் என்பதன் பொருள் முறைமை என்பதாக இருக்க, ‘விதி’ எனும் பொருளில் விளக்கம் சொல்லப்படுகிறது. பாமரருக்கும் புரியக்கூடிய வகையில் உள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு