மகாபாரத கதை நிகழ்வை தெளிவாக சொல்லும் நுால். குரு குலமரபினர், பாண்டவர் துரியோதனன் பிறப்பு, திரவுபதி சுயம்வரம், சூது, போர், காட்டு வாழ்க்கை, மறைந்து வாழ்தல், துரோணனின் உரைகள், வீடுமனின் வீழ்ச்சி, கர்ணனின் முடிவு, அவல முடிவுகள் என்ற தலைப்புகளில் எளிமையாக கதையை விளக்குகிறது.
வில்லிபாரதத்தை வரிசைப்படுத்தி, எளிய உரைநடையில் தருகிறது. இந்த கதைக்கரு பாஞ்சாலி சபதம் என்றாலும், அந்நிகழ்ச்சியை உணர்த்தும் நீதி, போர் என்பதாகும். அது, அழிவை உண்டாக்கும் என்பதால் தவிர்ப்பது, மானிட நெறி என வலியுறுத்துகிறது.
இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப கதை நிகழ்வுகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சூது, தீது, பெண் அடிமைத்தனம் கூடாது, போன்ற கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. தர்மம் மட்டும் போதாது; திட்டமிடுதல், செயலாற்றும் திறன் போன்ற தேவைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. நடைமுறையில் உள்ள உண்மையை விளக்குகிறது. மகாபாரதம் பற்றி அறிய உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்