நகரத்தார் சமூகத்தினரின் முதல் கோவில் மற்றும் பெருமை மிக்க வாழ்க்கை பற்றி, வரலாற்று பின்னணியுடன் எழுதப்பட்டுள்ள நுால். உழைப்பு, உண்மை, கொடை மற்றும் நம்பிக்கையால் பெற்ற உயர்வின் மூலம் உருவான கட்டமைப்பை கண் முன் நிறுத்துகிறது.
இரண்டு பகுதிகளாக நுால் உள்ளது. முதல் பகுதி, நகரத்தார் சமூக பெருமைகள், பண்பாட்டு சிறப்புகள் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கிறது. ஊரமைப்பு, வசதி நிறைந்த வீடுகளின் அமைப்பு, செல்வ செழிப்புடன் நிற்கும் மாளிகைகளின் உள் அலங்காரத்தை விளக்கும் வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. உரிய படங்கள் பொருத்தமான பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
நகரத்தார் சமூகம் வணங்கும் முக்கிய ஒன்பது கோவில்களின் அமைவிடத்தைக் காட்டும் தெளிவான வரைபடமும், கோவில் முகப்பு படங்களும் அந்தந்த பகுதிகளை தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. செட்டிநாட்டு பகுதியில் நகரத்தார் வசிக்கும் கிராமங்களின் அமைவிட வரைபடமும் உள்ளது.
அடுத்த பகுதி, ‘இணையற்ற இளையாற்றங்குடி’ என்ற பொருளில் கட்டுரைகளின் தொகுப்பாக தமிழில் உள்ளது. நகரத்தார் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, நம்பிக்கை, வழிபாடு, கலாசார பெருமையை தெளிவாக காட்டுகிறது. கதை போல் விவரிக்கப்பட்டுள்ளது. வண்ண ஓவியங்கள், சிலை அமைப்புகள் வாயிலாக வழிபாடு சம்பந்தமான விளக்கம் தரப்பட்டுள்ளது.
இளையாற்றங்குடி கோவில் அமைப்பு, அது சார்ந்த புராணக்கதைகள் உரிய விளக்கப்படங்களுடன் உள்ளது. அந்த கோவிலில் நடந்த கும்பாபிஷேகங்கள் பற்றிய வரலாற்று தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு துதி பாடல்கள் பிரத்யேகமாக உள்ளது.
நகரத்தார் சமூக பழக்க வழக்கங்கள், வட்டார வழக்கு சொற்கள், அந்த சமூக மக்கள் செய்துள்ள கோவில் கும்பாபிஷேகங்கள் பற்றிய தகவல்கள் தனியாக தரப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்டிநாட்டு மாளிகைகள் பற்றி தனிக் கட்டுரை, படங்களுடன் உள்ளது.
நகரத்தார் சமூக மக்களின் பத்திரிகை பணி, குமுதம் இதழ் நிறுவிய ஆசிரியரின் குடும்ப பின்னணி விபரமும் தொகுத்து தரப்பட்டுள்ளது. செட்டிநாட்டின் வரலாற்றையும், வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பிரத்யேக பண்பாட்டு சிறப்பையும் கண் முன் நிறுத்தும் நுால்.
– அமுதன்