வானொலியில், ‘மன்கிபாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் ஆற்றிவரும் உரையின் தமிழாக்கமே இந்த நுால். இந்த தொகுதியில், ஜூன் 2016 முதல், செப்டம்பர் 2017 வரை ஆற்றிய உரைகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டின் அன்றாட நிகழ்வுகள், முன்னேற்றத்தில் பங்கு பெற மக்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள், தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவூட்டல் போன்றவற்றை, கலந்து எழுச்சியூட்டும் வகையில் உரையாடுவதாக அமைந்துள்ளது.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் பெறும் ஓய்வு ஊதியத்தில் 5,000 ரூபாயை, ‘துாய்மை இந்தியா’ திட்டத்திற்காக மாதந்தோறும் வழங்கியது, ஓய்வுபெற்ற ஆசிரியை எரிவாயு மானியத்தை துறந்ததுடன், பிரதமர் திட்டத்திற்கு நிதி வழங்கிய நிகழ்வு, மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோளை இஸ்ரோ அமைப்பு விண்ணில் ஏவியது, யோகாசனத்தால் ஏற்படும் நன்மை என அக்கறையான பல பொருட்கள் பேசு பொருளாக உள்ளது.
குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இந்தியாவின் பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவின் சாதனைகள் பற்றிய பதிவுகளும் உள்ளன. தேசம் சிகரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், எண்ணத்தை மக்களிடையே விதைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்