அளவிலும், சுவையிலும் பெரிய யுத்த காண்டத்தை மிகவும் சுவாரசியமாக தரும் நுால். ராமன் வனவாசமும், சீதை சிறைவாசமும் முடிந்து, அயோத்தியில் பட்டாபிஷேகம் காண்பதோடு மங்கலமாய் முடிகிறது ராமாயண காவியம்.
ராவணனுக்கு நந்தி தந்த சாபம், குரங்கால் அழிவு என்பதை நினைவூட்டி, வால்மீகி சொல்லாத இரண்யன் வதை படலத்தை, கம்பர் ஏன் சொன்னார்... என கேள்வி எழுப்பி, விடை தேடுகிறது. நயமான விடையும் சொல்கிறது.
ஆதி காவியம் வால்மீகியையும், துணை காவியம் கம்பனையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டு சுவைத்து, படிக்க வைக்கும் பெருமையை கொண்டுள்ளது இந்த நுால். ஒரே இலையில் வடநாட்டு பாசந்தியையும், தென்னாட்டு பாயசத்தையும் சுவைக்கும் அற்புதமாக உள்ளது.
அனைவரும் படிக்கும் எளிய, இனிய உரைநடையும், தங்கு தடையில்லா கதை ஓட்டமும், சுவை தரும் கம்பன் பாடல்களும், நகைச்சுவை நளினமும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புதையல்.
– முனைவர் மா.கி.ரமணன்