நாளிதழில் நிருபராக பணியாற்றியவரின் அனுபவம் நுால் வடிவம் பெற்றுள்ளது. எவ்வாறு செய்தி சேகரிப்பது, தகவல்களை பெறுவது என்ற குறிப்புகள் பல உள்ளன. நிருபர் பணியில் சேரும் முன், ‘தினமலர்’ நாளிதழ் அப்போதைய ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி செய்த உதவிகளுக்கு நன்றி சமர்ப்பித்துள்ளார். ஹிந்து நாளிதழில் சேர்ந்தபோது, மருத்துவமனை பிணவறையில் இருந்த அமெரிக்க கறுப்பினப் பெண் சடலம் குறித்து செய்தி சேகரித்த அனுபவம் சுவாரசியமாக பதிவாகியுள்ளது.
தடம் புரண்ட ரயில் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருந்த எம்.ஜி.ஆர்., விழுப்புரம் வந்த போது, மேடையில் பேசியதை வரிசையாக கோர்த்ததால் கிடைத்த பாராட்டு பற்றியும் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆரோவில் காவல் நிலையம் துவங்கப்பட்ட போது, ‘அரவிந்தரின் கனவைச் சிதைத்த முரண்’ என எழுதியது போன்ற தகவல்களை சுவைபட பதிவு செயதுள்ளார். இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டும் நுால்.
– முகில் குமரன்