தமிழர் நாகரிகத்தில் தோன்றிய சித்தர்களே, உலக மெய்ப்பொருளியல் வரலாற்றின் முன்னோடிகள் என குறிக்கும் நுால்.
பிரபஞ்ச அசைவுகளுடன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் போன்றோரின் ஆய்வுகள், உயிரற்ற, உணர்வற்ற புறப்பொருள் ஆய்வோடு நின்றுவிட்டது. அகப்பொருளாகிய உடல், உயிர், உணர்வுகளை ஆராயாமல் விட்டது. இது, மனித குலத்துக்கு இழப்பு எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்தர்களே, ‘ஆதியந்தம் ஆதாரம் அகண்ட நாதம்’ என்ற ஒளியையும், ஒலியையும் பிரபஞ்சத்தில் 10 பரிணாமங்களாய் விவரிப்பதாக இந்த நுால் குறிப்பிடுகிறது. உடல் வளர்சிதைவுக்கு உதவும் சமச்சீர் தடுப்பு ஆற்றல் தத்துவங்களே உயிர்களுக்கு ஆதாரம் என்ற நெறியை வகுக்கிறது.
மேலைநாட்டு சார்பியல் கொள்கைகளையும், கீழைநாட்டு சார்பியல் கொள்கைகளையும் விளக்குகிறது. சித்தர்களின் உடல் நோய் சார்புநிலை, மனநோய் சார்புநிலை, நோய் நிவாரண சார்புநிலை, மரபணுக்களின் பரிமாற்றம், மனித புரிதல் போன்றவற்றை கொள்கை அடிப்படையில் விளக்குகிறது.
மெய்யடியார்கள், சித்த யோக தொண்டர்கள், ஆன்மிகம் விரும்பும் அன்பர்களுக்கு மிகவும் பயன்படும் நுால்.
– புலவர் சு.மதியழகன்