விளக்கேற்றும் விதிகள் பற்றி தெளிவாக விளக்கும் நுால். விரிவான செய்திகளுடன் அமைந்துள்ளது. விளக்கு தத்துவத்தை புரிய வைக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
விளக்கு தொடர்பாக, 12 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. முதலில், தீப வழிபாடு முறையை விளக்கும் விதமாக துவங்குகிறது. அடுத்து, சகல தோஷம் விலக தீப வழிபாடு, தீப வழிபாட்டு தத்துவம், தீப வழிபாடு தரும் திருப்பங்கள், குத்து விளக்கு பூஜை, விளக்குகளின் வகைகள், காமாட்சி விளக்கும் பலன்களும், திருவிளக்கு வழிபாடு, சந்தேகமும் விளக்கும், தீபத்தின் வகைகள், திருவிளக்கு பூஜைக்குரிய ஸ்லோகம் என தகவல்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு தலைப்புகளுக்குள்ளும், துணைத் தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால், விளக்கு ஏற்றுவதில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை எளிதாக நிவர்த்தி செய்ய உதவும்.
சங்க இலக்கியங்களில் தீப வழிபாடு பற்றிய சான்றுகள், தமிழர் பண்பாட்டில் தீப வழிபாடு என பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. கார்த்திகை தீபத்தில் சொக்கப்பனை கொளுத்துவதன் தத்துவமும் தரப்பட்டுள்ளது. சொக்கப்பனை என்பது ‘சுவர்க்க பனை’ என்றும், ‘சொக்கர் பனை’ என்றும் புதிய தகவலை விவரித்துள்ளது.தீப தத்துவத்தை உணர்த்தும் நுால்.
– ஒளி