உண்மை கனமானது என அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பு நுால். நண்பரின் காதல் திருமணத்திற்கு உதவுவதாக நினைத்து, மைனர் பெண் கடத்தல் வழக்கில் சிக்க இருந்தவர்கள் குறித்து, ‘அலை பாய்வது வாழ்க்கை அல்ல’ என்ற கட்டுரை உள்ளது.
பதிவுத் திருமணம் செய்த மகளை ஆட்கொணர்வு மனு மூலம் சந்தித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரின் சட்ட மீறலையும், அதற்கான தண்டனையையும், ‘சுதந்திர ஜீவன்களாக’ என்ற தலைப்பில் விவரிக்கிறது.
பதிவுத் திருமணம் என்பது விளையாட்டுக் காரியமல்ல; அது அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை. முறையாக பந்தத்தை முறிக்காமல், மறப்போம் மறைப்போம் என்ற எண்ணத்தில் அடுத்த பந்தத்தை நாட முடியாது என்பதை திருமணத்திற்கு மரியாதை என உரக்கச் சொல்கிறது.
திருமண விழாக்களில் புதுமை என்ற பெயரில் நடக்கும் விஷயங்கள், பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது; பாரம்பரிய கலை, கலைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் விவரிக்கிறது. நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தையும், விழிப்புணர்வையும் ஊட்டும் நுால்.
– சையது