ஐம்பெருங் காப்பியங்களில் ஹிந்து சமய நெறிகள் விரவிக் கிடப்பதை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால். சிலப்பதிகாரத்தில் ஹிந்து சமயக் கடவுள்களாகிய சிவன், திருமால், முருகன், கொற்றவை, இந்திரன் முதலான தெய்வங்களின் சிறப்பையும், வழிபாட்டு முறைகளையும் இளங்கோவடிகள் குறிப்பிடுவதாக பதிவு செய்துள்ளார்.
ஹிந்து தர்மம் வலியுறுத்திப் போற்றும் மனிதநேயம், வறியவருக்கு உதவுதல், ஊழின் வலிமை, அரசியல் தர்மம், இல்லறதர்மம் போன்றனவும் சிலம்பில் வலியுறுத்தப்படுகின்றன. சாத்தனார், மணிமேகலையில் கூறும் பவுத்த நெறிகள் அனைத்துமே ஹிந்து சமயத்தின் வேத உபநிடதங்களின் சாராம்சம் என்கிறார்.
சீவகசிந்தாமணியில் ஹிந்து சமயக் கடவுள்களின் பெயர்களும், தெய்வீக புராணக் குறிப்புகளும் உவமை வாயிலாக இடம் பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டுகிறார். வளையாபதி சமண சமயக் காப்பியமாயினும் ஹிந்து தர்மத்தின் அடிப்படை கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்றும், பவுத்த சமய காப்பியமான குண்டலகேசியும் செல்வம், யாக்கை, இளமை நிலையில்லாதவை என வலியுறுத்துவதாகவும் கூறுகிறார். தமிழ் இலக்கியங்களில் ஹிந்து சமய கூறுகளை தேடும் நுால்.
– புலவர் சு.மதியழகன்