வைணவம் – சைவம் என்ற சமய நெறிகளை இணைத்து, பக்தியின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அனுமனின் பக்தி உணர்த்தும் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களைப் போற்ற வேண்டும் என, காரைக்கால் அம்மையார் நிகழ்ச்சி கூறி விளக்கப்பட்டுள்ளது.
அபிராமிபட்டர் அமாவாசை நாளில் நிலவை வரவழைத்து அற்புதம் நிகழ்த்தியது, அழகாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பாணாழ்வாரைத் துாய பக்தராகக் கூறி அருணகிரிநாதரின் முருக பக்தியையும் விளக்கி, ஆணவம் கூடாது என்று உரைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு எதைப் படைத்தாலும், அன்பு எனும் அறுசுவை அதில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனிடம் பெற்ற நாவல் பழத்தின் வாயிலாகக் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று அவ்வையார் உணர்ந்ததை கூறுவது சிறப்பு. ஞானம், அன்பு, நியாயம், சமர்ப்பணம், துணிவு ஆகியவை நிகழ்வுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. நுாலாசிரியரின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளும் கூறப்பட்டுள்ளன. படிக்கச் சுவையாக இருப்பதுடன், பக்தியின் வலிமையை சொல்கிறது. பயனுள்ள ஆன்மிக நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து