இந்தியாவின் வடகிழக்கில் அசாமிய மலைத்தொடருக்கும், அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதிக்கும் இடையில் வாழும் மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி விளக்கும் நாவல். இந்தப் பகுதியில்வாழும் மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள் முதலானவற்றையும், வாழ்க்கை முறையையும் தெளிவுபடுத்துகிறது. ஆங்கிலத்தில் படைக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் பெற்றுள்ளது. இந்த நாவலில் இடம்பெறும் கிமூர், லெண்டம் முதலான பாத்திரங்கள் நெஞ்சத்தில் நிலைக்கின்றன.
ஆயிரத்து எண்ணுாறுகளின் நடுப்பகுதியில் இந்த மலைகளில் வாழ்ந்த இனக்குழுக்களின் பிரச்சனைகளும், சண்டைகளும் உணர்த்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களை பார்த்து அச்சம் கொண்ட இந்த மக்களின் உணர்வில் உண்மையும் இருக்கிறது என்பதை வாசிப்பவர்கள் அறிந்துகொள்வார்.
மிஷ்மி என்னும் பழைய பெயர்கொண்ட மலைப்பகுதி மக்களில் எண்ணிக்கையில் குறைவாக உள்ளவர்கள். தங்கள் இனத்தின் பெயரைக் கூட இழந்து, டெங்பா என அழைக்கப்படுகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுகின்றனர்.
இருப்பினும் பேச்சு மொழியையும், பண்பாட்டையும் தொடர்ந்து காப்பாற்றும் முயற்சியில் அந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ஆறுதல் அளிக்கிறது. 1847 முதல் 1855 வரை உள்ள ஆண்டுகளையே அத்தியாயங்களாக்கி நாவலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தால், அருணாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் உலாவரும் உணர்வு ஏற்படும்.
– முகிலை ராசபாண்டியன்