விழித்திடு, வெடித்திடு, வென்றிடு என்ற வாசகங்களால் முத்திரை பதித்துள்ள நுால். தமிழர்களை விழிப்புணர்வு கொள்ள செய்யும் வகையில் அமைந்தது. சினிமா, மது, ஜாதி, விளையாட்டு, தொலைக்காட்சி, நுகர்வு மோகம் ஆகியவற்றிற்கு தமிழர்கள் அடிமை ஆகியுள்ளதை கேள்வியாக எழுப்பி வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
ஆக்கப்பூர்வமான வழியில் இவற்றை மாற்ற உடனே செய்ய வேண்டியவை வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. தன்னம்பிக்கை இயக்கங்கள், தமிழ்த் தேசிய உணர்வு, அரசியல் சாசனப் புத்தமைப்பு, முதியோர் கல்வி, ஜாதி மதச் சார்பின்மை ஆகிய வழிகளைக் கூறியுள்ளார்.
அயல்மொழி ஆதிக்கம், மொழியுணர்வு இழப்பு, முறைப் பெயர் மறைப்பு, ஜாதிச் சிறுமை, விதி நம்பிக்கை, தாய்த் தலைமை வீழ்ச்சி, காதல் மண வீழ்ச்சி, கலப்பின ஆதிக்கம், வரதட்சணை கொடுமை, யவனர் மாது, மதுப் பழக்கம், அயலகத் துறவியர் பார்வை என, 24 ஆய்வுக் கட்டுரைகள் அறிவு விருந்தாக அமைந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்