சித்தர்கள் யார் என்று துவங்கி, சிவவாக்கியர் முதல் திருமூல சித்தர் வரை, 10 பேர் பாடிய பாடல்களை விளக்கும் நுால். பொருள் குறிப்பு உரையை சுருக்கமாக விளங்க வைக்கிறது.
பிராணயாம முறை சித்தர்கள் சொன்னது. இது, மூச்சு விடும் எண்ணிக்கை அளவிற்கு ஆயுள் அமையும் என்பதைக் கூறுகிறது. கோபப்பட்டால் மூச்சு எண்ணிக்கை கூடும் என்பதும், எண்ணிக்கை அதிகமானால் ஆயுள் குறையும் என்பதையும் தெளிவுபட விளக்குகிறது.
‘தெங்கிலே இளநீர் சேர்ந்தது போல, ஐயன் வந்து என் உளம் புகுந்து கோவில் கொண்டனன்’ என்பது சிவவாக்கியர் பாடல். தில்லைநாயகமும், திருவரங்கனும் ஒருவன் தான் என, சமய ஒற்றுமையை வலியுறுத்திப் பாடி இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
எள்ளில் எண்ணெய் போல், உயிரில் நிறைந்திருக்கிறான் ஈசன் என சொல்கிறது. காய்த்த மரம் கல்லடிபடும் என்ற பாம்பாட்டி சித்தர் பாடலும் விளக்கப்பட்டுள்ளது. மனம் செம்மையானால், மந்திரமே வேண்டாம் என்ற ஒரு வரி தத்துவத்தில் அகத்திய பெருமான் பாடியதை மிக எளிதில் புரிய வைக்கிறது. அஷ்டமா சித்திகளையும் அறிய வைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்