சொந்தமில்லாத நாட்டின் மீது பாண்டவர்கள் உரிமை கொண்டாடியதே, மகாபாரத யுத்தத்திற்குக் காரணம் என்பதை விவரிக்கும் நுால். துரியோதனனுக்குச் சொந்தமான நாட்டின் மீது உரிமை கொண்டாடினர். தமக்கென ஒரு நாடு இல்லையே என்ற வேதனையிலும், நாடு வேண்டும் என்ற ஆசையிலும் அந்த முறையற்ற உரிமையை கோரினர்.
அதை துரியோதனன் ஏற்றிருந்தால் பிரச்னையும் இருந்திருக்காது. நிராகரித்ததால், யுத்தமே வழி எனப் பாண்டவர்கள் முடிவெடுத்தனர். சூதாட்டத்தில் இழந்த நாட்டை, திருப்பிக் கேட்க உரிமை கிடையாது என பலராமர் கூறினாலும், பாண்டவர்களோ, கிருஷ்ணனோ ஏற்கவில்லை.
நேர்மையாகவே யுத்தத்தை துரியோதனன் நடத்தினான். சூதோ, கபடமோ, நாடகமோ இல்லை. ஆனால், பாண்டவர் யுத்தத்தில் அத்தனையும் இருந்தன. கிருஷ்ணனே அதை ஒப்புக்கொண்டான். சூது இல்லாவிட்டால் ஜெயித்து இருக்க முடியாது என்று தர்மனிடம் சொன்னான்.
பீஷ்மரும், துரோணரும், கர்ணனும் எப்படியெல்லாம் கடமையிலிருந்து மாறுபடுகின்றனர் என்பதும், இவையே துரியோதனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. சிந்திக்கத் துாண்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்