சமுதாயம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதளவில் அசைபோட்டு சிந்திக்க வைக்கின்றன. ஆன்மிகம், ஆரியம், தீண்டாமை, ஜாதியம், பழந்தமிழ்ப் பண்பாடு, விளிம்புநிலை மனிதர்கள், மானுடவியல் ஆகிய பொருண்மைகளை விளக்கும் வகையில் உள்ளது; சமூகத்தின் எதிரான போக்குகளையும் காட்டுகிறது.
ஒடுக்கப்பட்டோரின் நிலை பற்றிய கலகக் குரலை திடகாத்திரமாக உணர்த்தியுள்ளன. சமூகத்தில் நிலவும் கொத்தடிமை சிக்கல் பற்றி குறிப்பிடும் தகவல்கள், மதம் பற்றிய தீர்க்கமான பார்வையை கொண்டுள்ளன.
சமூகத்தில் வெட்டியான் என தனிப்பிரிவாகத் தாழ்த்தப்பட்ட வரலாறு, நாய் பற்றி வரலாற்றுப் பார்வையுடன் அது தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டமை, அல்குல் வழிபாடு போன்றவை ஆழமான தகவல்களைக் கொண்டுள்ளன.
இன வரைவியல் அடிப்படையில் சில அமைந்துள்ளன. செய்திகள் விபர அடிப்படையில் சிந்தித்து எழுதப்பட்டுள்ளன; அரிய உழைப்பில் வந்துள்ள நுால்.
–
ராம.குருநாதன்