எண்ணங்களுக்கு இடையே ஊடறுத்துச் செல்லும் வகையில் தகவல்களை வழங்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘குழந்தைகள் எனும் குருமார்கள்’ என்பதில் துவங்கி, ‘முயற்சிக்கு முடிவு ஏது’ என்பது வரை, 26 கட்டுரைகள் வலைப் பின்னலாக அமைந்துள்ளன.
தலைப்புகள் திரும்பிப் பார்க்கும் வகையில் உள்ளன. குழந்தையை குருவாக பார்க்கும் கட்டுரை, துவக்கத்தில் திகைக்க வைக்கிறது. தொடர்ந்து படித்தால் மன அழுத்தத்தைப் போக்குவோர் என முதல் கருத்திலே விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறது.
முயற்சி, மகிழ்ச்சி, புதுமை என எல்லாம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை உணர்த்துகிறது. முதுமை என்பது குதுாகலிக்கும் பருவம் என எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. படி ஏறும் போது மூட்டு வலி இருந்தாலும், அடுத்த நொடியே பாட்டுக் கேட்டபடி குதுாகலித்து உற்சாகமடையும் நிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எதையும் எல்லாரும் பார்க்கும் கோணத்தில் இன்றி, புதிதாக அணுகுவதே எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி என்ற தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை அனுபவப் பதிவுகளை கதை போல் சொல்லியுள்ளது கவரும் வகையில் உள்ளது. நேராக மனத்துக்குள் கருத்துகளை இறக்கிவிடும் நுால்.
–
முகிலை ராசபாண்டியன்