சிலப்பதிகாரத்தில் மக்கள் வாழ்வியல் முறை, துறவு மாந்தர் வாழ்க்கை நெறி, அரசரின் அன்றாட நடைமுறை, தொழில் புரிவோர், கலைஞர் கலைத்திறன் பற்றி ஆய்வு தகவல் தரும் நுால். மணவினை நிகழ்வுகள், ஏறு தழுவியவனுக்கு மணமுடித்தல், விருந்தோம்பல், பெண்களின் நிலை, நீராடல், நெற்றியில் திலகமிடல், தீ நிமித்தம் பார்த்தல், விளக்கேற்றல், முரசு அறைதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இயல்பில், சூழ்நிலையால், இல்லற முதிர்ச்சியால் துறவு பூண்டவர் என நிரல்படுத்தப்பட்டு, அவர்களின் தவ வாழ்வும், பின்புலமும், துறவுக்கான காரணங்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர் பெருமை, ஆட்சியின் சிறப்பு, போர் முறை, செங்கோலாட்சி முறை, நடுகல், கால்கோள் வழக்கம் சுட்டப்பட்டுள்ளன.
யவனர்களோடு பல்பொருள் பண்டமாற்று செய்த வணிகர்கள்; துகில், கலிங்கம், அறுவை, கூறை என்ற ஆடை நெய்த நெசவாளர் திறனும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பியச் சிறப்பை விளக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்