மனித இனக்குழு வாழ்க்கையில் துவங்கி, சமுதாய அமைப்பில் உறவு முறையின் வேர்களை அறியும் வகையில் அமைந்த நுால். தமிழ்ச் சமுதாயம் தோன்றிய இடமாக மலைப் பகுதியை அறிவித்து முதல் அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து சிறுகுடி வேளாளர், ஈழவர், வில்லவர், தீயர், பணிக்கர், பில்லவா சமுதாய வேர்களை அணுகி அறிந்து தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹிந்து மதத்தைச் சேர்ந்தோரின் ஆணிவேராகச் சிவனை அறிமுகம் செய்து, கிளைவேரை அறிவிக்கும் வகையில் சிவருத்திர புராணம் கட்டுரையை அமைத்துள்ளார். ஈழவர் என்றும், இல்லத்து பிள்ளைமார் என்றும் அழைக்கப்படுவோர் தான் சிறுகுடி வேளாளர் எனப்படுவோர் என தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏழ்பனை என்ற நாட்டின் திரிபு தான் ஈழம் என்றும், அது தமிழகத்தில் இணைந்திருந்த பகுதி என்றும், ஈழவர்களை ஆதி குடி நிலைக்கு உயர்த்தியுள்ளார். கல்வெட்டு செய்திகளையும், செப்பு பட்டய தகவல்களையும் ஆதாரமாக தந்து கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார். ஆய்வாளர்களுக்கு உதவும் நுால்.
–
முகிலை ராசபாண்டியன்