திருக்குறளில் ஒத்த கருத்து, அமைப்பு உடைய குறட்பாக்களைத் தேர்ந்து, பழைய உரைகளை பொருத்தி, இலக்கிய மேற்கோளுடன் விளக்கப்பட்டுள்ள ஆய்வு நுால். இகழ்வாரை பொறுத்தல், மனதோடு வாய்மை மொழிதல், கொல்லாமை, பொறுத்தாற்றல் தலை போன்ற செய்திகள் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளன.
‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றதறம்’ என்ற குறளில் இன்னாச்சொல் என்பதற்கு புறங்கூறல் என்றும், கடுஞ்சொல் என்று கூறுவதும் பொருந்தும் என விளக்கப்பட்டுள்ளது.
‘தினையும் பனையும்’ என்ற பகுதியில் தினை –தினையரிசி, பனை – பனம்பழம் என பொருள் கொண்டுள்ளது. மரமும் மரப்பாவையும், உயிரிருந்தும் இறந்தவர்கள், புலனடக்கம் என்பவை சிறப்புற விளக்கப்பட்டுள்ளது. திருக்குறளை ஆழ்ந்து கற்க விரும்புவோருக்கு பயனுள்ள நுால்.
–
அழகன்