திருமணத்தில் மனைவி – கணவன் துணை சிறப்பாக அமைய கடவுளிடம் கோரிக்கை வைப்போம். இதற்காக தல விருட்சங்களில் மாங்கல்யம் கட்டுவோம். அம்பாளுக்கு தாலிப்பொட்டு அணிவிப்போம்.
கடவுளுக்கே திருமணம் செய்து அழகு பார்ப்போம். அரியதொரு மனிதப்பிறவி எடுத்து, சிவனும், பார்வதியும் சொக்கர் – மீனாட்சியாக வந்தனர். சிவன் பாம்பைக் கழுத்திலே அணிந்து, புலித்தோலை உடுத்தியிருக்கிறான்; சுடுகாட்டு சாம்பலை பூசியிருக்கிறான்.
இவனா அழகு மீனாட்சிக்கு கணவன் என பலரும் தடுத்த போது, ‘நீங்கள் புற அழகைத் தான் பெரிதுபடுத்துகிறீர்கள். ஆனால், என் துணைவரின் அக அழகைப் பாருங்கள். அவன் அருளே வடிவானவன். யாதுமானவன்...’ என்று பெருமை பேசினாள் மீனாட்சி.
பெண்ணோ, ஆணோ தங்களுக்கு வரப்போகும் துணையின் அழகு பற்றி அல்லாமல், மனம் பற்றி மட்டுமே கவலைப்படுங்கள் என்று அன்றே திருமணம் மூலம் உணர்த்தினர். இதை தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது இந்த புத்தகம்.
இதே போல சீனிவாச கல்யாணத்தில், மனைவியை எந்தச் சூழலிலும் பிரியக்கூடாது என்று ஆண்களுக்கு உணர்த்தப்படுகிறது. ருக்மிணி கல்யாணத்தை கவனியுங்கள். இவள் தான், உலகிலேயே முதல் காதல் கடிதம் தீட்டியவள். மனம் கவர்ந்த கண்ணனுக்கு எழுதி, காதலில் வெற்றி பெற்றே தீருவேன் என சபதம் செய்து, உறவுகளையும் மீறி திருமணம் செய்திருக்கிறாள்.
பெற்றவர்கள் முடிவு செய்யும் திருமணமும் வெற்றி பெறும் என நிரூபித்திருக்கிறாள் சீதை. ஒரு வில், இவளது திருமணத்தை தீர்மானித்தது. இந்த வில் சத்தத்தை மட்டும் எழுப்பவில்லை. அண்ணலின் சம்மதத்தையும் மறைமுகமாக தெரிவித்தது. உடனே சீதையாய் அவதாரமெடுத்த லட்சுமி, ராமனாய் வடிவெடுத்த திருமாலை மணம் செய்து கொண்டாள்.
வள்ளி திருமணம் காதலுக்கு ஜாதியில்லை என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தது. தம்பியின் திருமணத்துக்கு அண்ணன் உதவுவதைக் கொண்டு, சகோதர ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு கடவுள் திருமணத்திலும், தத்துவங்களைப் பொதித்து புனைந்துள்ள நுால்.
–
தி.செல்லப்பா