சிறுகதைகள் எழுதுவது என்பது பெரிய கலை. இக்காலத்தில் நிறைய இளம் எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பை இன்றைய பேச்சு மொழியில் எழுதுகின்றனர். அதைப் படிக்க ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. அவ்வகையில், பிரபு சங்கரின் சிறுகதைகள் அருமையாக எழுதப்பட்டுள்ளன.
பத்திரிகையாளரான அவரது அனுபவம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.
முதல் கதை ராதா கல்யாணத்தின் இறுதி வரியில், ‘மாப்பிள்ளை ஒரு நிம்மதி சந்தோஷத்துடன் ராதாவைப் பார்த்தான். அவள் வெட்கித் தலை குனிந்தாள்’ என்றிருக்கிறது.
இக்காலத்தில், பெண் பார்க்கும் படலம் நடக்கும் எந்த வீட்டிலாவது, இப்படி ஒரு அனுபவத்தை பார்க்க முடியுமா... மாப்பிள்ளை முன் நேருக்கு நேராய், ‘டேய் ஜீவா! நான் வேலை பார்க்கிறேன்; நீயும் வேலைக்கு போகிறாய். உன் வீட்டுக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும்... நானும் இவ்வளவு கொடுப்பேன்...’ என்று பேரம் பேசுவது மட்டும் தானே காதில் விழுகிறது.
இதையே அக்காலப் பெண்கள், எவ்வளவு பொறுப்பாக பேசியிருக்கின்றனர் பாருங்கள். அதிலுள்ள நியாயத்தை புரிந்து, மாமியாராக வரப்போகிறவரே மனம் மகிழ்ந்து, வருங்கால மருமகளை பாராட்டியிருக்கிறார். முதல் கதையிலே முத்திரை பதித்துள்ளார்.
‘இன்னும் ஐந்து செகண்டுகள் தான்’ என்ற கதை, போன் பேசிக்கொண்டே, சாலையில், ரயில் தண்டவாளங்களில் நடக்கும் மக்களுக்கு படிப்பினை. டிரைவரால் ரயில் வண்டியை நிறுத்த முடியாது என்ற நிலையில், அவரது மன ஓட்டம் வேகமாகிறது.
கடைசியாக அந்த இளைஞர் நிலை என்னவானது... படித்துப் பாருங்கள்.
சிறந்தது அலுவலகப் பணியா, புரோகிதமா என்று பட்டிமன்றமே நடத்தப்பட்டிருக்கிறது ‘விழுதுகள்’ சிறுகதையில். இறுதி முடிவு துணிச்சலாக உள்ளது. ஒவ்வொரு கதையும் மணி மணியான படிப்பினைகளை தருகின்றன.
– தி.செல்லப்பா