பத்திரிகையாளருக்கு, அனுபவங்களே பாடமாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள நுால்.
பத்திரிகையாளராக, 40 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர் எஸ்.ரஜத். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது வாழ்க்கைத் தொடரை எழுதியவர்.
எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணனிடம் பேட்டி கண்டு சுவாரசியமிக்க தகவல்களை எழுதியவர்.
கருணாநிதியை சந்தித்த அனுபவத்தையும் எழுதும் போது, ‘உங்களுக்குப் பிடித்த குறள் எது’ என்ற கேள்விக்கு, ‘விலை உயர்ந்த முத்துக்களை தரையில் பரப்பி விட்டு, இதில் உங்களுக்குப் பிடித்தது எது என்று கேட்டால், எப்படி கூறுவேன்’ என்ற பதில் சுவைமிக்கது.
இவர் சந்தித்த மதிப்பு மிக்க மனிதர்களைப் பற்றியும், அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல்கள் பற்றியும் சுவைபட எழுதி உள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் தரையில் அமர்ந்து பேட்டி கொடுத்தது பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா, டூ – வீலரில் படுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தது, காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லியை நேரில் கண்டது பற்றி சுவைபட குறிப்பிட்டுள்ளார்.
கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவைப் பற்றி முதன்முதலில் செய்தி எழுதியது, நிர்வாணப் படங்கள் வரையும் பெங்களூர் பெண் ஓவியரை நேரில் சந்தித்தது என, தான் சந்தித்த மனிதர்களின் இயல்பு பற்றி தெளிவாக கூறியுள்ளார்.
ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது கிடைக்கும் அனுபவங்களில் இருந்துதான் பாடம் கற்கிறோம். அது போல் இந்த நுாலில் பலரின் அனுபவ பாடங்கள் உள்ளன. அது பலருக்கும் படிப்பினை தரும் வகையில் உள்ளது.
– சூர்யா