கண்காட்சி, பேய், அவன், பொறி, புதிய உலகம், வினோதன் டார்வின், அதிர்ஷ்டம், ஆதாம் ஏவாள், பூமி, கடவுளைத் தேடி, ஆவரேஜ், அனாதை ஆகிய பன்னிரண்டு விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு தான் "வாவ் சிக்னல்". தமிழக அரசு, 2020ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
பாரம்பரிய கதை சொல்லும் முறையிலிருந்து விலகும் எந்தவொரு கதையும் அறிவியல் புனைகதை கதையின் நவீன வரையறைக்குள் பொருந்துகிறது. கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒரு கதையை எழுதுவது சாத்தியம் என்றால், அது அறிவியல் புனைகதைகளின் எல்லைக்குள் மட்டுமே அடைய முடியும்.
அத்தகைய கதையின் ஒரு வகை எதிர்காலத்தில் நடக்கக்கூடிய அறிவியலை விவரிக்கிறது. இயற்கையின் விதிகளை மாற்றுவதன் மூலமும், அவற்றுக்கிடையே எழும் புதிய மோதல்களை விவரிப்பதன் மூலமும், நமது உலகின் விதிகள் அல்லது அறிவியல் கோட்பாடுகளிலிருந்து வேறுபட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகின் மாற்று விதிகளை நிறுவுவதன் மூலமும், ஒரு அறிவியல் புனைகதையை மேம்படுத்தலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆசிரியர்.
மேலும், கதையில் விவரிக்கப்பட்டுள்ள அறிவியல் வாசகருக்குப் புரியும் பட்சத்தில், கதை மேலும் ஈர்க்கும். இத்தகைய ஈர்க்கும் கூறுகளைச் சேகரித்து "வாவ் சிக்னல்" தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையின் மூலமும் வாசகனின் ஆழ் மனதில் ஊடுருவி அறிவியல் சிந்தனைகளைக் கிளறிவிடுவதே இந்தத் தொகுப்பின் பலம்.
– முருகவேலு வைத்தியநாதன்