தமிழர் தொடர்பான ஆய்வுகளில் புத்தொளி பாய்ச்சும் நுால்.
கொல்லா விரதம் ஓங்க அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். தமிழில் ஒரு லட்சம் பாடல்கள் பாடியவர். அதில், 49,000த்திற்கும் சற்று அதிகமே கிடைக்கின்றன.
புலவர் புராணம், பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம், பொதியாசலப் படலம் என்ற துவக்கப் பகுதிகள், 72 சருக்கங்கள், 3,005 பாடல்களை உடையது. 70க்கும் மேற்பட்ட புலவர் வரலாறு பாடப்பட்டுள்ளது.
அகத்தியர் துவங்கி தெரிந்த புலவர்கள், அறியாத வசைகவியாண்டான், வீரபாண்டிப் புலவர், கந்தசாமிப் புலவர், ஆறுமுகப் புலவர், சீனிவாசன், முதுகுளத்துாரார், முத்துவயிரவன் சேர்வைக்காரன் என பலரையும் பதிவு செய்துள்ளார்.
இந்த நுால், 130 ஆண்டுகளில் நான்கே முறை தான் அச்சாகியுள்ளது. முதன்முறையாக விரிவான உரையுடன் செம்பதிப்பாக வெளிவருகிறது. உரையாசிரியர் பேராசிரியர் சு.வேங்கடராமன், தமிழ் இலக்கிய உலகிலும், தத்துவ உலகிலும் அறியப்பட்டவர். இந்த நுாலுக்கு உரை எழுதுதல் சாதாரண விஷயமல்ல. பல இடங்களில் சுவாமிகள் கூறிய கருத்து வெளிப்படையாகத் தெரியாது.
நுால் தோன்றிய காலத்திற்கும், இன்றைக்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இந்த சூழலில், தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூடாக், பாவலர் சரித்திர தீபகம்,அபிதான சிந்தாமணி என, முக்கிய புலவர் வரலாற்று நுால்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி உரை எழுதப்பட்டுள்ளது.
பட்டினத்தார், அருணகிரிநாதர், மெய்கண்டார், உமாபதி சிவாச்சாரியார் வரலாறுகளில் முக்கிய மாற்றங்களை பதிவு செய்துள்ளார். அதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.
புலவர் புராணத்திற்கு முந்தைய நுால்களில் புலவர் வரலாறுகள், புலவர் புராணம் மட்டும் கூறும் வரலாறுகள், புலவர் புராணம் கூறும் புதிய தமிழ் நுால்கள், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான விபரங்களை அட்டவணை தயாரித்து இணைத்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு மூலநுால்.
– சவுந்திர.சொக்கலிங்கம்