பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டும். அது மேடை பேச்சாகட்டும் அல்லது நட்பு, உறவுகளுக்கிடையேயான உரையாடலாகட்டும்... அதில் கண்ணியம் இருக்க வேண்டும்.
இதற்கும் மேலாக, அந்தப்பேச்சு காலம் முழுவதும் பேசப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
கோல்கட்டாவில் ஒரு கூட்டம். குமரி அனந்தன் சிறப்பு பேச்சாளர். காளை தொடர்பாக ஒரு பேச்சு வந்தது. அங்கு அனந்தன் என்ன பேசினார் தெரியுமா? அவ்வளவு சுவாரசியம். இந்த நுாலில் அது பற்றிய விபரம் இருக்கிறது.
வெளிநாட்டு அறிஞர்களின் பேச்சு துவங்கி, தமிழக அரசியல் பிரமுகர் நெடுஞ்செழியன் வரை தலைவர்களின் பேச்சு எந்தளவு மறக்க முடியாததாக இருந்தது என்பது அழகுபடச் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு கவிஞரா? உங்கள் கவிதையை உலகமே பாராட்ட என்ன செய்ய வேண்டும்? விடை தந்திருக்கிறது இந்த புத்தகம்.
இளம் பேச்சாளர்கள், தங்களை செதுக்கி செம்மையாக்க, என்னென்ன வித்தையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்தெடுத்து தந்துள்ளார் நுால் ஆசிரியர்.
பல்லை விட அற்பமானது எது? மனிதனிடம் உள்ள வியப்பான குணம். இதற்கெல்லாம் இதிகாசங்கள் என்ன பதில் சொல்லியுள்ளன என ஆன்மிக பக்கமும் தலைகாட்டியுள்ளது. உயிர், உடலில் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு பல புத்தகங்கள் பல விடைகளைத் தந்திருக்கும்.
இந்த புத்தகத்தில் இருப்பதோ வித்தியாசமான விடை. பேச்சுத்திறனை உயர்த்த உதவும் கரமாய் இந்த நுால் திகழும் என்பதில் வியப்பேதும் இல்லை.
– தி.செல்லப்பா