ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுதலை பெற ஜாதி, மதம் பாராமல் அனைத்து இந்தியர்களும் ஒருமித்த நோக்கில் போராடினர். ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவ்வாறு வீர தீரச் செயல்களைச் செய்த சில முக்கிய பிரமுகர்களை பற்றிய நுால்.
ஆங்கிலேயருக்கு பதிலடி கொடுக்க பத்திரிகைகளை ஸ்தாபித்த தேசாபிமானி ஜி.சுப்பிர மணிய ஐயர், காந்திஜியால் மகாபுருஷர் என பெருமையோடு பாராட்டப்பட்ட கிருஷ்ணசாமி ஐயர், ஆங்கிலத்தில் திறமையோடு பேசுபவர்.
இங்கிலாந்து தேசத்தில் பிறக்கவில்லையே என ஆங்கிலேயரை வருத்தப்பட வைத்த சொல்வீரர் எஸ்.சத்தியமூர்த்தி ஐயர்; ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து அட்வகேட் ஜெனரல் பதவியைத் துறந்த தேசபக்தர் எஸ்.ஸ்ரீநிவாசய்யங்கார்...
தமிழகத்தில் முதன்முதலாக மதுவிலக்கு கொண்டு வந்த மூதறிஞர் ராஜாஜி; பசியென்று வந்த எந்த மதத்தினருக்கும் வீட்டில் உணவை அளித்து உபசரித்த எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்; இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலே முதன் முதலில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி; மன்னிப்பு கேட்டால் விட்டு விடுகிறோம் என்று கூறியதை அலட்சியம் செய்து சிறைசென்ற அம்புஜம்மாள்...
இல்லத்தின் எதிரிலேயே அந்நியத் துணிமணிகளை கொளுத்திய ஜகன்மோகினி வை.மு.கோதை நாயகி; ரயிலில் பயணம் செய்யக்கூடாதென தடையுத்தரவு போடப்பட்ட சுப்பிரமண்ய சிவா; பிரிட்டிஷ் சர்க்காருக்கு ராஜவிசுவாசியாக இருப்பேன் என பிரமாணம் எடுத்தால்தான் பாரீஸ்டர் பட்டம் என்றதால், ‘அந்த பட்டமே எனக்குத் தேவையில்லை...’ என வெளியேறிய வ.வே.சு. ஐயர்; ஆங்கிலேய கலெக்டரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த வீரவாஞ்சி என தியாகிகளின் தெரியாத பக்கங்களை விலாவாரியாக விவரித்திருக்கிறார்.
இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.
–- இளங்கோவன்