பிரச்னை என்ற சொல்லைக் கேட்டாலே, மனிதர்கள் பயந்தோடுகின்றனர். நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? பயந்து ஓடி எந்த புதருக்குள் ஒளிந்தாலும், அது விடப்போகிறதா என்ன! தேடிவந்து தாக்கத்தானே செய்யும்.
எனவே, பிரச்னைகளை எதிர் கொள்ளுங்கள். அவற்றை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்ற தெளிவான அறிவுரையுடன் துவங்குகிறது இந்தப் புத்தகம்.
பிரச்னைகள் பலவகையில் ஏற்படுகின்றன. துாரத்தில் இருக்கும் பிரச்னையை, அருகில் இழுத்துக் கொள்வது இதில் ஒரு வகை. அந்த வகை தான் பொறாமை.
பிறரது முன்னேற்றம் கண்டு பொறாமைப்படும் சிலர், தாங்களும் முன்னேற வேண்டும் என சிந்திக்காமல், முன்னேறியவரை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் வலம் வருகின்றனர்; சேற்றை வாரி பூசுகின்றனர்.
மாறாக, முன்னேற்றத்தின் காரணிகளை கண்டுபிடித்து, அதன்படி நடக்க முயன்றால், அது தான் முன்னேற்றப்படிகளில் ஏற உதவும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, தனி மனிதர்களுக்கும் அவரவர் பணிக்கேற்ற ஆளுமைத்திறன் எப்படி அமைய வேண்டும் என்பதை பல தலைவர்களை உதாரணம் காட்டி எடுத்துரைக்கிறது.
ஆளுமைத்திறனுக்கு உருவ அமைப்பும் முக்கியம் என்பதை அழகாய் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புத்தகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஒரு கட்டுரையில் அருமையாய் சொல்லப்பட்டுள்ளது.
‘உன்னிடம் எதையும் எதிர்பாராமல், தன்னை உனக்கு முழுமையாய் அளிக்கும் நண்பனே நுால்கள்’ என்று அமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ சுட்டிக்காட்டுவது போல, இந்த நுாலும் சிறந்த நண்பன் என அடித்துச் சொல்லலாம்.
– தி.செல்லப்பா