சுசீந்திரம் கோவிலின் வரலாறு, ஆன்மிக பரிமாணம், சமூக தொடர்புகள் மற்றும் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நுால். தமிழக கோவில்களில் வெளிப்படையாகப் பார்க்க முடியாத பல அம்சங்களை வெளிக்கொணர்கிறது.
சுசீந்திரம் கோவில் பற்றிய 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள், ஆவணங்கள், புராணப் பதிவுகள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. நீண்ட ஆய்வு செய்துள்ளதை நுாலின் கட்டமைப்பே நிரூபிக்கிறது.
பண்டைய கோவிலின் வரலாற்று பிணைப்புகள், அதன் சமூக பங்களிப்பு மற்றும் மெய்ஞானச் சிந்தனைகள் சேர்த்த ஒரு பண்பாட்டு பயணமாக உள்ளது.
சுசீந்திரம் கோவிலில் தேவதாசி சமூகத்தினர் வகித்த பங்கு, ஏற்பட்ட மாற்றங்கள், அவர்களின் இடம் மற்றும் செயல்பாடு பற்றிய விவாதங்கள் சிந்தனையை எழுப்புகின்றன.
திருவிழாக்கள் வழி சமூக உறவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நில உரிமைகள் பற்றிய ஆழ்ந்த செய்திகளும் முக்கியக் கூறுகளாக அமைகின்றன. இது, வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு மட்டுமல்லாது, ஒரு ஊரில் அதன் மக்களுக்கும் கோவிலுக்கும் இடையே ஏற்பட்ட உறவின் ஆவணமாக திகழ்கிறது. சுசீந்திரம் கோவிலின் முப்பரிமாண தன்மையை விவரிக்கிறது.
ஆன்மிகம், சமூகம், கலாசாரத்தை ஒன்றிணைத்து முன் வைக்கிறது. தலைமுறை பாரம்பரியம், பூரண ஆய்வுக் கட்டமைப்பு, மொழியின் எளிமை என அனைத்தும் இதை முக்கியமான படைப்பாக நிலைநிறுத்துகின்றன. ஆய்வாளர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், கோவில் வரலாற்றில் ஆர்வமுள்ளோர் தவறாமல் வாசிக்க வேண்டிய நுால்.
– இளங்கோவன்