உலகில் நிச்சயமான ஒன்று என்றால் அது நிகழ்காலம் மட்டுமே! கடந்த காலம் பற்றி யாருக்காவது தெரியுமா? எப்போது, எப்படி, எந்த நாளில் இறக்கப் போகிறோம் என்ற எதிர்காலம் யாருக்காவது தெரியுமா? மரணம் மட்டுமே வாழ்வில் நிஜமானது, மற்றுள்ள நம் உறவுகள், சொத்து சுகங்கள் ஏதாவது நிரந்தரமா என்ன! வேண்டுமானால், இவற்றை கொண்டு வாழும் காலத்தில் மகிழ்வையும், துன்பத்தையும் சந்தித்திருக்கலாம்.
ஆனால், நிரந்தர உறவு எது? கடவுள் மட்டுமே! படைத்தவனே நம்மை அழைத்தும் கொள்கிறான்.
குருக்ஷேத்திர போரில் எதிரே தன் உறவுகளெல்லாம் நிற்பது கண்டு கலங்கிய அர்ஜுனனுக்கு, கண்ணன் உபதேசித்தது கீதையை. கீதையின் சாரம் என்ன! உடல் நிலையற்றது, ஆன்மா மட்டுமே மரணம் எய்யாதது. அது மறுபடியும் எங்கேனும் பிறக்கும். என்று இவ்வுலக வாழ்க்கை பொய் என்ற உணர்வு பிறந்து, கடவுள் மட்டுமே நிலையானவர் என்ற நிஜ உணர்வு பிறக்கிறதோ, அன்று தான் பிறவி நோய் நீங்கும். உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று வள்ளுவரும் இதையே சொல்கிறார்.
இந்த இரண்டு அரும்பெரும் நுால்களும், வாழ்வின் யதார்த்தத்தை சொல்வதை, ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடக்கும் உரையாடலாக, சிறு சிறு அத்தியாயங்களாக குழந்தைகளுக்கென்றே எழுதியுள்ளார் ஆசிரியர் எல்.ராதிகா.
மிக மிக சுவாரசியமான நடையில் இந்த நுால் எழுதப்பட்டுள்ளது. கீதையும், குறளும் பெரியவர்களே புரிந்து கொள்வது கடினம் என்ற சூழலில், ஒரு பெரிய வாழ்க்கை தத்துவத்தை, குழந்தைகள் கூட எளிமையாக புரிந்து கொள்ள இந்த நுால் உதவியாக இருக்கும்.
வீட்டிலுள்ள பெரியவர்களும், பள்ளி ஆசிரியர்களும் சிறுவர்களுக்கு இந்நுாலை வாசித்துக் காட்டினால், அவர்கள் கீதை மீதும், குறள் மீதும் ஆழ்ந்த பற்று கொள்வர் என்பதில் ஐயமில்லை.
-– தி.செல்லப்பா