தியானம் செய்வதால் கிடைக்கும் சக்தியையும், பலன்களையும் எடுத்துரைக்கும் நுால். உள் ஒளியை உணரும் வழிமுறைகளை தெளிவு படுத்துகிறது.
தியானம் என்பது என்ன, இயற்கையின் தாய்மை படைப்பு, இந்து மதக்கோட்பாடு, தியானமும் உள் உருமாற்றமும், தியானமும் உடல் நலமும், வாழ்க்கையில் தியானம், தியான பயிற்சி, தியானம் செய்யும் முறை, தியானத்தின் முன்னேற்றம், தியானத்தின் உள்வேலைகள், தியானமும் நோயறுத்தலும், நோயறுப்போரின் குணாதிசயங்கள், தியானத்தின் நன்மைகள் என்ற துணைத்தலைப்புகளில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தலைப்பு சொல்லும் செய்திகள், தியானத்தின் பக்கம் மனதை ஒருங்கிணைத்து நம்பிக்கையுடன் வழிப்படுத்துகிறது. அலைபாயும் மனதை நிலைப்படுத்தும் முறையை புலப்படுத்துகிறது.
தியானம் மீது ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது. கரடுமுரடான கல்லை செதுக்கி, அழகிய சிற்பம் வடிப்பது போல் நுட்ப தகவல்களை படிப்படியாக உணர வைக்கிறது.
தியானத்துக்கு தயாராகும் போது ஏற்படும் தடுமாற்றத்தை சுட்டிக்காட்டி ஆதரவு கரம்பற்றி அடுத்து செய்ய வேண்டியதை எடுத்துரைக்கிறது. தியானம் என்பது சிந்தனையை அடிப்படையாக கொண்ட உத்தி என்பதை தெளிவாக்குகிறது.
அதன்படி நின்று வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிகாட்டுகிறது. தியானத்தின் விளைவால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுகிறது.
கற்பனை திறனையும், படைப்பாற்றலையும், தொழில் சார்ந்த முன்னேற்றத்தையும் தியானம் எவ்வாறு நிகழ்த்தும் என்பதை தெளிவுபடுத்துகிறது. உள்ளத்தில் ஒளி ஏற்ற தியானம் உதவும் என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது.
ஆன்மிகத்தில் ஒவ்வொரு சுவட்டையும் நம்பிக்கையுடன் எடுத்து வைக்க கற்றுத்தருகிறது. தியானமே முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் என்ற உறுதியை தரும் நுால்.
– ஒளி