காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 248).இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் காலந்தோறும் திறனாய்வாளர்களின் கருத்தைக் கவர்ந்து வருகிறது. மூலபாட ஆய்வு நிகழ்த்துவதற்கும், திறனாய்வு நிகழ்த்துவதற்கும், உண்மைகளைக் கண்டுணர்ந்து உரைப்பதற்கும் களனாக விளங்கி வரும் சங்க இலக்கியங்களில் அரசியல் பற்றிய ஆய்வை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.சங்க இலக்கியத்தில் காணப்படும் அரசியல் செய்திகளைத் தமிழகத்தில் காலந்தோறும் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளோடு பொருத்திப் பார்த்த ஆய்வு இது என்பதால் கவனத்துக்குரியது ஆகிறது. இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நிகழ்ந்த சங்க இலக்கிய ஆய்வுகள் அக்கால அரசியல் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கங்களை இரா.நாராயணன் தெளிவுபடுத்தியுள்ளார்.சங்க இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டு வரும் பணியில் சமய இயக்கங்கள் ஈடுபட்டதையும் மறுமலர்ச்சிக் காலத்தில் நிகழ்ந்த சங்க இலக்கிய ஆய்வுகளையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தத்தில் தமிழக - இந்திய அரசியல் வரலாற்றுக்கும், சங்க இலக்கிய ஆய்வுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள உதவும் மிகச் சிறந்த ஆய்வு நூல் இது.ஐரோப்பிய பாதிரியார்களை குறிப்பதற்கு "தந்தைமார்' என்ற சொல்லை இந்நூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது மொழி பெயர்ப்பாளர்களின் சிந்தனைக்கு உரியது ஆகும்.