ஆங்கில நூல். கர்நாடிக் கிளாசிகல்ஸ், எஸ்.கே.எம்., கம்ப்யூட்டர் பிரின்டர்ஸ், தி.நகர், சென்னை--17. போன்: 044-2441 7196. (பக்கம்: 832.)
கர்நாடக இசைக்கு ஒரு புதிய ஆங்கில அகராதி, கர்நாடக இசை வாக்கேயகாரர்கள் (பாடல் இயற்றுபவர்கள்) கலைஞர்களின்
திறமைகளை வெளிப்படுத்தும் இசைக் கண்ணாடி "தி எலக்வென்ட் கார்லண்ட்.'
புத்தகத்தின் முன் அட்டைப் படத்தில் மும்மூர்த்திகளும், நாயன்மாரும் மற்றும் அனைத்து தென்மாநில இசைக்கருவிகள் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் புத்தகத்தின் பின் அட்டைப் படத்தில் ஆசிரியரின் நிழற்படம்.
இறைவனின் குரலாக என்று புத்தகத்தின் துவக்கத்திலும் முடிவிலும் குறை ஒன்றும் இல்லை, "மைத்ரீம் பஜ-த' பாடலின் வரிகளை கொடுத்துள்ளார்.
புத்தகத்தின் துவக்கத்திலேயே கர்நாடக இசையின் தொட்டிலான காவிரி ஆற்றை பிரித்துக் கொண்ட மாவட்டங்களையும் வரைபடமாக கொடுத்திருப்பது நல்ல அமைப்பு.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முகவுரையுடன் பல அறிஞர்கள் இசை ஆசிரியர்கள், வல்லுனர்களின் பாராட்டுரை இடம் பெற்றிருக்கிறது.
அனுபவம் கலந்த அறிவு எங்கே? என்ற கேள்வியுடன் துவங்கி அது இங்கே என்பது போல பல மாறுபட்ட கோணங்களில் கட்டுரைகளின் தலைப்புகளாகக் கொடுத்து அனைத்து இசைத் தகவல்களையும் இசைக் கருவி போல் சேகரித்து பக்குவமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
இசையின் அந்நாள் குருகுலவாசம், குரு சிஷ்ய பாவம் இந்நாள் "சைபர் பேஸில்' எப்படி இ-லர்னிங் என்று கணினி வழிக் கல்வி வரை அன்றும் இன்றும் என்றும் தேவைப்படும் இசைத் தகவல்களையும், பல இடங்களில் இசை வரலாற்றில் ஏற்பட்ட பல நிகழ்வுகள் என்றும் இந்த புத்தகத்தில் உள்ளது என்பதை குறிப்பால் உணர்த்தி அதற்கு பல மேற்கோள்களை நகைச்சுவையுடன் கொடுத்திருக்கிறார்.
இப்புத்தகத்தின் 550 பக்கங்களுக்கு மேல் இசை வல்லுனர்கள் மற்றும் பாடலாசிரியர்களைப் பற்றிய தகவல்கள், பாடுபவர், கருவி இசைப்பவர், இசையியல் வல்லுனர்கள் என்று பிரித்து ஆங்கில எழுத்து வரிசையில் கொடுத்து புத்தகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவில் இசைப் பயணம் என்ற தலைப்பிலும் இரண்டாம் பிரிவில் சுயசரிதை, மூன்றாம் பிரிவில் சில முக்கிய இசை நிகழ்வுகள் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகள், சிந்தனை கொத்துக்களாக கொடுத்துள்ளார்.
இதேபோல் இசை வல்லுனர்களின் தகவல்களின் நடுவிலும் பல கட்டுரைகள் துணுக்குகளாக கொடுத்துள்ளார். நான்காம் பகுதியில் இசையின் கலைச்சொற்களுக்கு அரும்பத விளக்கங்களும் பாடலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனமாகவும் மிகுந்த ஆர்வத்துடன் சேகரித்து கொடுத்திருக்கிறார் என்பது படித்ததிலிருந்தே தெரிகிறது.
எடுத்துக்காட்டாக, இசையியல் வல்லுனர் பேராசிரியர் சாம்பமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றில் அவர் பிறந்த ஊர், பெற்றோர், குடும்பம், கல்வி, அவரது திறமைகள், கிடைத்த விருதுகள், செய்த தொண்டுகள் குறிப்பாக ராணி மேரி கல்லூரியில் இசைத் துறைக்கு அவரது முதல் விரிவுரை கொடுத்தது.
கடந்த 1937ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை தலைவராகப் பணியாற்றியது போன்ற பல குறிப்புகள் பொக்கிஷங்களாக செய்திகள் படிப்போருக்கு அடுத்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது என்ற ஆவலை நிச்சயம் தூண்டும் வகையில் உள்ளது.
புத்தகத்தின் நடுவே பல அரிய புகைப்படங்கள் இசையில் அனைத்து பிரிவுகளிலும் சேகரித்து கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் இசை மணம் வீசிக் கொண்டே இருக்கும்
"அழகு மாலை' இந்நூல் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.