கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம்-626117. (பக்கம்: 148.)
கம்பன் என்னும் மாநதியில் குளித்து, முத்தெடுத்து நம்மை மகிழ்விக்கப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அம்முறையில் இந்நூல், நமக்கு 15 நல்முத்துக்களை அளிக்கிறது. கவிதைக்குச் சுவையே அதன் கருத்தாழம் தான். கம்பன் கூட இப்படிக் கருதியிருப்பானா? என்று நம்மை வியக்க வைக்கும் விதத்தில் இந்நூலாசரியர் கம்பனின் பல பாடல்களை நயம் கூறி விளக்கியுள்ளார்.
"உலகம் யாவையும்' என்று தொடங்கும் முதல் பாடலில் உழைப்பே மிக உயரிய தொழுகை என்று விளக்குவதும் (பக்.3-8), ஆளுவோர்க்குரிய தகுதிகளை "தாய் ஒக்கும் அன்பின்' என்ற பாடலின் துணை கொண்டு விளக்குவதும் (பக்.9-15), தயரதன் தனக்குக் குழந்தை வேண்டும் என்று ஏன் வேண்டினான் என்பதை "அறுபத்தைந்தாயிரம் ஆண்டும் மாண்டுஉற' என்ற பாடலால் விளக்கியும் (பக்.16-20), பிறர் துயர் கண்டு வருந்தினால் போதாது; அத்துயர் துடைக்கப் பட வேண்டும் என்பதை "மண்ணினும் நல்லள்' என்ற பாடல் மூலமாக விளக்குவதும் (பக்.70-76), விராதன் துதிப் பாடலில், "வாராதே வரவல்லாய்' என்ற சொற்றொடரை மிக அழகாகக் கற்பனை நிகழ்வுடன் விளக்குவதும் (பக்.77-81) சிறப்பு.
ராவணனுக்குச் சிறியவர்கள் அறிவுரை கூறியபோதே அவன் இறந்து போனான் என்பதைப் பதிமூன்றாம் கட்டுரையில் விளக்குவதும் (பக்.105-112) அருமை.
வாலிவதை, வாலி மோட்சம் இரண்டுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்கி, இரண்டின் பொருத்தத்தையும் விளக்குவதும் (பக்.82-104) "நாகிளங்கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடைவள்ளல்' என்ற சொல்லாட்சியைப் புதிய பார்வையில் விளக்குவதும் (பக்.113-122) நூலாசிரியரின் நுட்பமான அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாகும்.
பிழையற்ற இந்நூலில், தேவையான இடங்களில் திருவள்ளுவர், வள்ளலார், மாணிக்கவாசகர் மற்றும் பல அறிஞர்களின் மேற்கோள்களும் அமைந்து நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன.
ராஜபாளையம் கம்பன் கழகத்தாரின் இத்தொண்டிற்கு தமிழ் கூறு நல்லுலகம் என்றும் நன்றி பாராட்டும் என்பது உறுதி.