DRAVIDIAN LINQUISTICS ASSOCIATION, THIRUVANANTHAPURAM &86, KERALA, (பக்கம்: 452)
சங்கத் தமிழ் நூல்களில் காணப்படும் வினை வடிவங்களை மட்டும் தொகுத்து நூற்பெயரும், பாட்டு எண்ணும் வரி எண்ணும் சுட்டிப் பொருள் எழுதி ஒழுங்கு செய்யும் இவ்வரிய பணியைச் சீரிய முறையில் செய்துள்ளார் புலவர் மணியன். எம்மொழியினும் சிறந்த செம்மொழியாக விளங்கும் நம் தமிழ் மொழியின் பெருமை புலப்படச் செய்யும் இந்நூற்கு ராமானந்த அடிகள் அறக்கட்டளை வழியாக பொருள் உதவி செய்துள்ளவர் புரவலர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் .
பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு (மேற்கணக்கு) இலக்கியங்களில் மட்டும் 1047 மூல வேர் வினைச் சொற்கள் காணப்படுகின்றன. இவையன்றி சொல்லுருபு சார்ந்தும், துணை வினையுடனும் ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் வேர்ச்சொற்கள் காணப்படுகின்றன என்பது நூலிலிருந்து அறியத் தக்க சிறந்த செய்தி.
தமிழ்,உயர் தனிச்செம்மொழி என்பதற்கான வலிய சான்றுகள் இதன்கண் உள்ளன.
சங்கத்தமிழ் நூல்களில் காணப்படும் தெரிநிலையும்,குறிப்புமாகிய எல்லா வினைச் சொற்களும் தொகுத்து அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வினைச்சொல் தொகுப்பின் பயனாக நாம் பெறுவன வினைப்பகுதிகள்(verbal roots). இவையே ஒரு மொழியின் செம்மையைச் சீர்த்தூக்கிக்காட்டுவனவாம்
அஃகிய (சுருங்கிய) எனும் சொல் தொடங்கி, வெள (வெளவு, பற்று) எனும் சொல் முடிய ஏறத்தாழ ஈராயிரம் சொற்கள்( குறித்த சில சொற்களுக்கு பொருளுரையுடன்) இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் மொழிக்கு உயிர், வினை வடிவங்கள் என்பதை நிலைநாட்டும் முதல் நூல் இது என்பது பாராட்டிற்குரியது.
"அக்குளத்து' என்பது கிச்சு கிச்சு மூட்டுதல்; அகல் என்பது அகன்ற என்ற பொருளோடு இருள் எனும் பொருள் தருதல், வீ எனும் ஓரெழுத்து ஒருமொழி, அழி, இற, உதிர், வறள், மலர் (வினை) என பல பொருள் தருதல் போன்ற பல செய்திகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அருமையான கட்டமைப்புடன் அமைந்துள்ள இந்நூல் தமிழ் மாணவர், அறிஞர், படைப்பாளர் கள் எனப் பல திறத்தாரும் பயன்பெறத் தக்க நன்னூல்.