ஸ்ரீஆனந்த நிலையம், 29/5, ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136).
தற்போது கம்பெனிகளின் மதிப்பு, தராதரம், செயல்பாடுகளைப் பொறுத்து ரூ.50 முதல் ரூ.500க்கும் அதிகமான பிரிமியம் தொகை செலுத்தி விண்ணப்பிக்கும்போது சிறு முதலீட்டாளர்களுக்கு ரேஷனாக 10-15 பங்குகள் மட்டுமே, அதுவும் குலுக்கல் முறையில் ஒருசில அதிர்ஷ்டசாலிகளுக்கு மாத்திரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இமயத்தை தொட்டுக் கொண்டு ஊசலாடி வருவதும் பரமபத சோபன (பாம்பு -ஏணி) விளையாட்டைப் போன்று, ஏறுவதும், இறங்குவதுமானதோர் நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.இத்தகைய சூழலில் முதலீட்டாளர்களுக்கு ஓர் ஒப்பற்ற வாய்ப்பாகவும், வேறு எந்த முதலீடுகளையும் விட, பாதுகாப்பான, நம்பிக்கைத் தன்மையுடன் கூடியதாக மியூச்சுவல் பண்டு விளங்குகிறது. எந்த நேரமும் வாங்கவும், விற்கவும் வசதிகள் இதில் உள்ளன.இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காலூன்றிய இத்தகைய பண்டு தற்போது முப்பது நிறுவனங்களாகப் பெருகியதுடன், பொதுமக்களிடம் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயைப் பெற்று, மக்களின் தேவைகளைப் புரிந்து, நம்பிக்கையுடன் செயலாற்றி வருகின்றன. இத்தகைய செய்திகளுடன் மியூச்சுவல் பண்டு செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தாங்கிய அறிமுக நூலாக பால பாடமாக இது அமைந்துள்ளது.தனி நபர் வருமானம் மேம்படுத்துவதற்கான அறிவுரைகள் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நூல்கள், குடும்ப நலன், பொருளாதார வளம் கருதி, தமிழில் மேலும் வெளிவர வேண்டும்.