வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248. விலை: ரூ.80)
பாடுமொழி பதினெட்டு என்னும் இந்த நூலில் பதினெட்டுக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக் காட் டாய் அமைகின்றன. நகை என்னும் முதல் கட்டுரை நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம் சொல்லியுள்ள நான்கு விளக்கங்களையும் விளக்குகிறது. நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாய் தலைவியைச் சந்திக்கும் இரண்டு பாணர்களின் பரிதாப நிலையைக் காட்டுகிறார்.
தலைவன், தலைவியைப் பிரிந்து பரத்தையுடன் வாழ்கிறான். மீண்டும் தலைவியுடன் வாழ விரும்பிய தலைவன், பாணனைத் தூதாக அனுப்புகிறான். அந்தப் பாணனைக் கன்னக் கோல் திருடனுடன் ஒப்பிடும் தண்டியலங்காரப் பாடலைக் காட்டுகிறார் புலவர் பசுபதி. கன்னக்கோல் திருடன், வீட்டில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக முதலில் பானையின் உள்ளே குச்சியை நுழைத்து அனுப்புவான். பானை உடைந்தால் ஆட்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொள்வான். அதைப் போன்றே பானையைப் போல் உன்னை அனுப்பியுள்ளான் தலைவன் என்கிறாள் தலைவி.
இரண்டாவது பாணனின் பாடல் திறத்தைப் பேயின் அழுகை என்றும் நரியின் ஊளைச் சத்தம் என்றும் நாய் குரைக்கும் ஓசை என்றும் தலைவி கேலி செய்வதாக வரும் நந்திக் கலம்பகப் பாடலை விளக்கியுள்ளார். இதைப் போன்றே பதினெட்டுக் கட்டுரைகளும் சுவை குறையாமல் உள்ளன.
காளமேகப் புலவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலில் உள்ள பதினான்காவது கட்டுரையைப் படித்தால் போதும். அந்த அளவுக்குக் காளமேகத்தின் பாடல்கள் பிறந்த நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். வசை பாடக் காளமேகம் என்னும் தொடர் காளமேகத்திற்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கும் பல விளக்கங்களைப் பேராசிரியர் பசுபதி தந்துள்ளார்.
நல்ல இலக்கியப் பேச்சு நடையில் அமைந்துள்ள இந்த நூலை எடுத்தவர்கள் படிக்காமல் வைக்க மாட்டார்கள்.