45. இந்தி- இங்லீஷ் -டிக்ஷனரி: ஆசிரியர்கள்: ரமாரவிதிதி, சி.என்.கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. தொலைபேசி எண்.2433 1570. (பக்கம்: 704. விலை: ரூ.200)
உலக அரங்கில் இந்தி மொழி மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஒரு கணிப்பு இம்மொழிக்கு ஆங்கிலத்தில் பொருள் அறிதல் ஆங்கிலம் வாயிலாக இந்தியை அறிந்து கொள்பவர் அனைவருக்கும் அவசியம்.
பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலப் பள்ளிகளில் படிப்பதனாலும், வாழ்வில் ஒரு பெரும் பொறுப்பு வகித்து இந்தி கற்க நினைப்பவர்கள் ஆங்கிலத்தில் ஒப்பீடு செய்வதாலும், இத்தகைய அகராதிகளுக்கு புழக்கத்தில் நல்ல பயன் உண்டு.
தோராயமாக 50 ஆயிரம் சொற்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் இரு பத்திகளாக நல்ல முறையில் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு சொற்களின் இலக்கணக் குறிப்பும், பால் அடையாளமும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தி சொல்லுக்கு ஆங்கில உச்சரிப்பு இடம் பெறவில்லை.
`பக்ஷி' (பக்.335) பெண்பால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், `ஆண்பால்' என்று தான் பயன்படுத்துகிறோம். திருத்தம் தேவை.
அகராதி என்றால் சிறு சிறு எழுத்துக்களில் படிப்பதே நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, பூதக்கண்ணாடி இன்றி படிக்கக்கூடிய அளவில் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது.
நஜர் ரக்னா, நஜர் ஆனா, நஜர் உதார்னா, நஜர் கர்னா, நஜர் கானா, நஜர் டால்னா, நஜர் லக்னா என்று பல பிரயோகங்கள் `நஜர்' சொல்லில் இருந்து சிறப்புப் பொருள் தெரிவிக்க சொற்றொடர்
களாகப் பயன்படுத்தப்படும். ஆனால், நஜர் (பக்.302) என்ற சொல்லுக்கு மட்டும் பொருளளித்து உள்ளனர். எளிமையான அணுகுமுறை கருதி தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இந்திய எடை அளவீடு (பக்.685), இலக்கனிசாரம் (பக்.687)
அகராதியின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
அகராதியின் வடிவம், அமைப்பு, எளிமை மற்றும் இலக்கண விளக்கம் அகராதியைப் பயன்படுத்துவோரின் பெரும் வரவேற்பை ஐயப்பாட்டுக்கு இடம் இன்றி உறுதிப்படுத்துகின்றன.