கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (தனித்தனி நான்கு பாகங்கள். மொத்த பக்கங்கள்: 1167.)
அழியாதது கல்வி; ஆனால், மாறாதது அல்ல. கல்வியின் ஆழமும், அகலமும், கோணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. கல்வி மாறுவதற்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் முற்றிலும் மாறி வருகின்றன. கரும்பலகை, கணினியாக மாறிவிட்டது.தமிழ் வழியில் கற்பதும், கற்பிப்பதும் எந்தெந்த வகையில் மாறியுள்ளன; புதிய புதிய உத்திகள் எவ்வாறெல்லாம் தோன்றியுள்ளன என்பதை விரிவாக ஆய்வு செய்து; நான்கு நூல்களில், 182 ஆய்வுக் கட்டுரையாளர்கள், 1167 பக்கங்களில் விளக்கம் தந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, போற்றத்தக்க பெரிய கருத்தரங்கை நடத்தி, அதை நூலாக வெளியிட்டுள்ளது. மிகப் பெரிய கல்வித் தொண்டு இது!முனைவர்கள் எஸ்.குமரன், கிருஷ்ணன் மணியம், அரங்க. பாரி, பத்மாவதி விவேகானந்தன், அபிதா சபாபதி ஆகிய பேராசிரியர்கள் பொறுப்பேற்று நூலைப் பயனுள்ள வகையில் வடிவமைத்துள்ளனர்.தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றை இன்றுள்ள அறிவியல் கருவிகளுடன் புதிய முறையில் பள்ளியில் கற்பிப்பதை பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.கணினி, ப்ளூ டூத், இணையம் ஆகிய இன்றைய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி உற்சாகமாக கற்பிக்கும் வழிகள் காட்டப் பட்டுள்ளன.மருத்துவம், பொறியியல், கணிதம், வரலாறு, அறிவியல், வணிகம் போன்ற பிற துறைக் கல்வியையும், தமிழ் வழியில் கற்பிக்கும் உத்திகள் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன.திரைப்பட ஊடகத்தில் கொல்லும் சொற்கள் எனும் தலைப்பில் சுவையான சில செய்திகள் உலா வருகின்றன. ஆப்ரகாம் லிங்கனும், கென்னடியும் அமெரிக்க ஜனாதிபதி ஆனது, சுடப்பட்டது என எட்டு ஒற்றுமைகள் பெற்றிருந்தனர். ஆனால், 100 ஆண்டு இடைவெளியில் வாழ்ந்திருந்தனர்.இன்றைய கற்பித்தல் மாணவர்களை கவரவில்லை. இதை மாற்ற வேண்டும் என பல வழிகளைக் கூறுகிறது நூல். பண்புக்கு முதலிடம் தரவேண்டும்; விளையாட்டுக்கு அதிக நேரம் தந்து, அதன் வழி கற்பிக்க வேண்டும். மாணவரது சிக்கலை உணர்ந்து, அதை நீக்க வேண்டும்; என்றெல்லாம் கூறியுள்ளது.தமிழ் இசையை மேம்படுத்த வேண்டும், கோவில்களில் திரைப்பாடல், நடனங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் கருத்து முத்திரை பதிக்கிறது (பாகம்-1. பக்.259).
`தந்தானே தந்தானே தந்தான குயிலே' எனும் திரைப்பாடல் மெட்டில் இலக்கணத்தைப் பாடிக் கற்பிக்கும் முறை, வேப்பங்காய் இலக்கணத்தை, வெல்லக் கட்டியாய் மாற்றும் முறையாகும். (பாகம்-3. பக்.16). கடிதம் எழுதுதல், கணிதம் கற்பித்தல், மிருதங்கம் கற்பித்தல், வெண்பா எழுதுதல் போன்றவைகளுடன் திருமந்திரம் கூறும் `துணையது வாய்வரும் தூயநற் கல்வி' விரிவாகக் கூறப்பட்டுள்ளது.எனவே, நல்ல ஆசிரியருக்கான மிகச் சிறந்த கல்வியை, கற்பித்தல் முறைகளை, காலத்திற்கேற்ப இந்த நான்கு ஆய்வு நூல்களும் அள்ளித் தருகின்றன.ஆனாலும், சில குறைபாடுகள் கவனிக்கத் தக்கவை. ஒரே தலைப்பும், நன்னூல் போன்ற ஒரே உதாரணங்களும், கற்பித்தலுக்குத் தொடர்பே இல்லாத பொதுவான கட்டுரைகளும் பல உள்ளன. பிரித்து, தரம் பார்த்து, சுருக்கி தரப்பட்டிருந்தால் ஒரு நூல் மிச்சப்படுத்தி இருக்கலாம்.ஆசிரியர் ஒவ்வொருவர் கையிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய வேத நூல்கள் இவை.