மணிவாசகர் நூலகம், 8, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை-17.
திருக்குறள் மூலமும் உரையும் பல அறிஞர் பெருமக்களால் எடுத்தாளப்பட்டு, பல்வேறு தலைப்புக்களால் நூல் வடிவம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ள குறள் தொடர்பான நூல்களுள் சரித்திரச் செம்மல் சு.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள இந்த பழைய உரை பெரிதும் வித்தியாசமானதாகும்.
தொல்லியல் துறையில் பணிபுரிந்து அரிய தொண்டாற்றியுள்ள நூலாசிரியர், பழைய உரைகளுள் ஒன்றாக விளங்கும் அரிய சுவடியின் பல்வேறு கூறுகளையும் பிறவற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்து இந்நூலை உருவாக்கியுள்ளார். சில குறள்களுக்கு இவர் எழுதியுள்ள உரைகளில் சமண சமயம் சார்ந்த கருத்துக்கள் காணப்படுவதை எடுத்து விளக்கியிருக்கிறார். அறிஞர் எல்லீசின் திருக்குறள் கல் வெட்டை இவர் பதிப்பித்திருக்கிறார்.
மேல் சித்தாமூர் ஜினகஞ்சி மடத்திலிருந்து தொல்லியல் துறைக்காக சமண சமயச் சார்புடைய திருக்குறள் ஓலைச் சுவடியை நன்கொடையாகப் பெற்று, அச்சுவடிகளை நகல் எடுத்து தேவைப்படும் குறிப்புக்களையும் இணைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
ஏற்கனவே நாலடியார் குறித்து ஆய்வு செய்துள்ள இவர், இந்த உரை நூலில் நாலடியார் தொகுப்பிலிருந்து பொருந்தும் இடங்களில் எல்லாம் குறளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதைப் படிக்கும்போது, ஆசிரியரின் ஆய்வுத் திறனை நம்மால் உணர முடிகிறது.
உரை தோன்றிய காலத்தின் மொழி நடை, பழக்க வழக்கப் பண்பாட்டுக் கூறுகள், உரை கூறும் நெறி ஆகியவற்றை சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக எடுத்துக்கூறியிருக்கிறார் என்பதை அணிந்துரை எழுதியுள்ள சுந்தரமூர்த்தி குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரியானதே என்பதை இந்த நூலைப் படிக்கும்போது நாம் தெரிந்து கொள்கிறோம். நூலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இடம் பெற வேண்டிய சிறந்த புத்தகம்.