குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 280).
பாரதச் சுதந்திரப் பொன் விழாவை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை இளந்தலைமுறையினருக்கு நினைவுபடுத்தவும், உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் "ஜீவா முழக்கம்' வார ஏடு பொன் விழா மலர் தயாரித்து வெளியிட்டது. மலர் தொடுக்கும் பொறுப்பை நூலாசிரியர் ஏற்று நாடு முழுவதும் சுற்றி ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகள் பெற்று மிகுந்த அக்கறையோடு மலரை உருவாக்கி அதில் வெளிவந்த கட்டுரைகளை நூல் வடிவம் தந்திருக்கிறார்.
இதில், 36 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாமே தரமாக உள்ளன. குறிப்பாக தியாக சீலர் சுப்பிரமணிய சிவம், ஜீவாவும் இந்திய சுதந்திரப் போராட்டமும், திப்புசுல்தான் விடுதலைப் போரின் முன்னோடி ஆகிய கட்டுரைகள் சிறப்பானவை.
சுதந்திரப் போர்க்களத்தில் டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகங்கள், கட்டுரையில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய "பாணபுரத்துவீரர்' நாடகத்தைக் குறிப்பிடாமல் விட்டார். ஏனோ தெரியவில்லை!
வீரத் தியாகி விஸ்வநாத தாஸ், கட்டுரை உயிர் துடிப்போடு அமைந்து கண்களில் கண்ணீரை குளமாக்குகிறது. வழக்கறிஞராகிய நூலாசிரியர் சொந்த நலன்களை உதறி விட்டு பொதுத் தொண்டு என்பது எவ்வளவு கடுமையானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து ஈடுபட்டதற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
இம்மாதிரியான நூல்களே நாட்டுக்குத் தேவை.