இதிகாச பாத்திரங்களின் வரலாறை அறிந்து கொள்வதில் எத்தனையோ பேருக்கு ஆர்வம். இதிகாசம் என்ற சொல்லை, ‘இதி ஹ ஆஸ’ என்று பிரிப்பர். இதற்கு, ‘உண்மையில் நடந்தது’ என்று பொருள்.
ஆம். இதிகாசப் பாத்திரங்கள் உண்மையானவை. அவற்றில் வரும் சம்பவங்கள் உண்மையானவை. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை சொல்பவை. திரவுபதி ஐவருக்கு மனைவி என்பதெல்லாம் ஏற்புடையதா என்ற வாதம் உண்டு. ஆனால், அதன் தாத்பர்யம் அறிந்து பேசுவது நல்லது.
மகாபாரத பாத்திரங்கள் மட்டுமல்ல, இவை போன்ற வாதங்களுக்கெல்லாம் கூட, இந்நுாலில் மிக அருமையான விளக்கம் அளித்திருக்கிறார்.
தர்மர் முதல் நகுலன் வரையிலான சகோதரர்கள், துரியோதனன் முதல் துச்சாதனன் வரையிலான கவுரவர்கள், கர்ணன், குந்தி, திருதராஷ்டிரன், சஞ்சயன், ஜெயத்ரதன் முதலான தெரிந்த பாத்திரங்கள் தவிர்த்து, புஷ்பக்கடை, தாத்ரேயிகை, திரஸ்கரணி, மணிமான், ஆர்ஷ்டிஷேணர் என கேள்விப்படாதவர்கள் வரலாறெல்லாம் உண்டு.
ஏற்கனவே, நுாலின் முதல் பாகத்திலும் இதே போல பாத்திரங்கள் வந்து உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆக, இரண்டு பாகங்களுமே கையில் இருப்பது, மகாபாரதம் பற்றிய முழு அறிவையும் படிப்பவர்களுக்கு தந்து விடும்.
கேள்விப்படாத சம்பவங்களும் புத்தகத்தில் உண்டு. சத்தியவான் சாவித்திரி என்றாலே, கணவனை மீட்க எமனுடன் வாதிட்ட காட்சி தான் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி ஒரு வரலாற்று புதையலையே தோண்டியெடுத்துள்ளார் நுாலாசிரியர்.
இந்த புத்தகம் உங்கள் கையில் இருந்தால், பாரதம் பற்றி எங்கு வேண்டுமானாலும் போய், எந்தக் கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இன்னும் தெரியாத பாத்திரங்களை தோண்டியெடுங்களேன் என்று இந்திரா சவுந்தர்ராஜனுக்கு கட்டளையும் இடலாம்.
– தி.செல்லப்பா