முகப்பு » கதைகள் » 100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள்

விலைரூ.650

ஆசிரியர் : என்.ஜெயந்தி

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு’ என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. இவை பெரும்பாலும், எல்லா இலக்கிய வாசகர்களுக்கும் பிடித்தவை.
அங்கொன்றும், இங்கொன்றுமாக கதைகளை படித்து வந்தபோது, கு.ப.ராஜகோபாலன் எழுதிய, ‘விடியுமா’ கதை, சட்டென்று மனதில் கனமாக அப்பி கொண்டது. ‘சிவராமய்யர் டேஞ்சரஸ்’ என்று அந்த கால அபத்தமான ஆங்கிலத்தில் அடித்த தந்தி கிடைத்து, ரயிலேறும் குடும்பம் பற்றிய கதை. சின்னச் சின்ன உரையாடல்களும், நம்பிக்கை எழுவதும், விழுவதுமாக கும்பகோணத்தில் இரவில் துவங்கிய பயணம், சென்னையில் முடியும்போது, அந்த சிவராமனின் உடலை மருத்துவமனையில் பெற்றுக் கொள்கின்றனர். மனதில் இருந்து பயம் தீர்கிறது. பின்? விடிந்து விட்டது. கதை அவ்வளவு தான்.
‘மனதில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்கு புழுப்போல துளைத்துக் கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒருதரம். அந்த திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடி வயிறு கலங்கும்; முகம் விகாரமடையும்; மறுபடி மெதுவாக சமாதானத்தின் பலன் அதிகமாகும்; பயத்தை கீழே அமுக்கி விடும்’.
‘கதை கருவிலும், சொல்லும் முறையிலும், மொழிநுட்பத்திலும், கதையின் வடிவத்திலும், ௭௦ ஆண்டுகளுக்கு முன், கு.ப.ரா., சாதித்ததை, அடுத்து வந்தவர்கள் கடந்தனரா அல்லது எட்டினரா? என்ற கேள்வியும், இந்த கதைகளை படிக்கும்போது எழுகிறது. ‘இந்திய அளவில், தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன’ என்ற, எஸ்.ரா.,வின் பிரகடனம் உண்மையாக இருக்கட்டும்.
ஒரே எழுத்தாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், புத்தகத்தில் அங்கங்கே தட்டுப்படுகின்றன, எஸ்.ரா., எழுதிய கதைகள் உட்பட. அதை தவிர்த்திருந்தால், இன்னும், 10 எழுத்தாளர்களின் அறிமுகம், இந்த புத்தகத்தின் மூலம் கிடைத்திருக்கலாம்.
எழுத்தாளர் இரா.முருகன்

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us