வசந்த பதிப்பகம், மனை எண்.9, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (தொகுப்பு ஒவ்வொன்றும் பக்கம்: 320. )
`பட்டினியை மட்டும் கைச்சரக்காக வைத்துக் கொண்டு பாரதியாகி விட்டதாக நினைக்கும் எழுத்தாளர்களும் இந்த நாட்டில் தான் இருக்கின்றனர்' (85), `கையில் நெருப்பையும் கழுத்தில் பாம்பையும், தலையில் நீரை (கங்கையை)யும் பல்லூழி காலமாய்ப் பொறுமையுடன் சுமந்து கொண்டிருக்கும் அந்த உடுக்கைக் கரத்தானுக்கு அருளப்பரின் பேச்சைப் பொறுக்க முடியவில்லை' (184), `அவளைக் கண்ணீருக்குக் காணிக்கையளித்து விட்டு நீ கிளப்பில் காலத்தையும் காசையும் போக்கினாய், அவள் மட்டும் பொங்க மாட்டாளா?' (பக்.293) `திருட்டில் தொடங்குகிற வாழ்க்கை இருட்டில் செல்கிற ஒற்றையடிப் பாதை' (பக்.303- தொகுதி-2) இப்படிப்பட்ட வித்தியாசமான எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்த மூத்த எழுத்தாளர் வாசவனின் சிறுகதைக் களஞ்சியம் பாகம்-1ல் 31 சிறுகதைகளும், பாகம்-2ல் 35 சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
`நான் இந்த உயிர் எழுத்தைக் கொண்டு மெய்யெழுத்தைத் தொட்டுத் தொய்யாது தொடர்ந்து எழுதுகிறேன். `ஏன்' என்பது இல்லை. `வான்' என்பதே என் எல்லை' என்று எழுத்தை நேசிக்கும் இந்தக் கதைகளில் வாழ்க்கைச் சிக்கல்கள், முரண்கள், கொடுமைகள், வாழும் காலத்தின் எதிரொலிகள், வருங்காலத்தின் கனவுகள் எல்லாமே சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஐம்பது ஆண்டுகாலச் சிறுகதை பரிமாணத்தை, இலக்கிய உத்தியை ஆய்ந்து பார்க்க உதவும் இத்தொகுப்பு நூல்கள் ஆரோக்கியமான இலக்கிய வரவுகள், வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.